இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதி அமெரிக்க உளவுத்துறை தகவல்

இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி உள்ளதாக அமெரிக்க உளவுத்துறை திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதி அமெரிக்க உளவுத்துறை தகவல்
Published on

வாஷிங்டன்,

போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இந்திய ராணுவ வீரர்களை மட்டுமல்லாது அப்பாவி மக்களையும் குறிவைத்து பாகிஸ்தான் துருப்புகள் தாக்குதல்கள் நடத்துகின்றன.

இந்த மாத தொடக்கத்தின்போதுகூட காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணகாதி பகுதியில் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் திடீரென தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் ராக்கெட் வீச்சிலும், துப்பாக்கிச்சூட்டிலும் சிக்கி, இந்திய ராணுவத்தின் இளநிலை அதிகாரி பரம்ஜீத் சிங் மற்றும் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த தலைமை காவலர் பிரேம் சாகர் ஆகியோர் பலியாகினர். அவர்களது தலைகளைத் துண்டித்து, உடல்களை சிதைத்து பாகிஸ்தான் படையினர் நடத்திய வெறியாட்டம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இன்னொரு பக்கம், தனது உளவுத்துறையின் உதவியுடன் இந்தியாவில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையும் பாகிஸ்தான் அரங்கேற்றி வருகிறது.

அமெரிக்க உளவுத்துறை தகவல்

இந்த நிலையில், இந்தியாவிலும், ஆப்கானிஸ்தானிலும் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி வருவது அம்பலத்துக்கு வந்துள்ளது.

அமெரிக்க பாராளுமன்றத்தின் செனட் சபையின் தேர்வுக்குழு உறுப்பினர்கள் மத்தியில், உலகளாவிய பயங்கரவாதம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (உளவுத்துறை) இயக்குனர் டேனியல் கோட்ஸ் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பாகிஸ்தானில் உள்ள போராளிகளையும், பயங்கரவாதிகளையும் ஒடுக்குவதற்கு அந்த நாட்டின் அரசு தவறி விட்டது. இந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் நலன்களுக்கு எதிராக பாகிஸ்தானில் இயங்கி வருகிற பயங்கரவாதக் குழுக்கள் தொடர்ந்து அச்சுறுத்தலாக திகழ்ந்து வருகின்றன.

சதித்திட்டம்

பாகிஸ்தானை மையமாகக்கொண்டு இயங்கி வருகிற பயங்கரவாதக் குழுக்கள், இந்தியா மீதும், ஆப்கானிஸ்தான் மீதும் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கு சதித்திட்டம் தீட்டி வருகின்றன.

பாகிஸ்தான் தொடர்ந்து தனது அணு ஆயுத பலத்தை விரிவுபடுத்திக்கொண்டே செல்கிறது.

ஆப்கானிஸ்தான் நிலவரம்

ஆப்கானிஸ்தானைப் பொறுத்தமட்டில் அந்த நாட்டின் அரசியல், பாதுகாப்பு நிலவரம் மோசமாகிக்கொண்டே செல்கிறது. அங்கு கிராமப்புறங்களில் தலீபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்துவதைத் தொடருவார்கள் என்றுதான் கணிக்க முடிகிறது.

தலீபான் பயங்கரவாதிகளின் செயல்பாடுகளால், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படைகளின் நிலை மோசமாகத்தான் வாய்ப்பு உள்ளது.

பாகிஸ்தான் கவலை

சர்வதேச நாடுகளால் தனிமைப்படுத்தப்படுவது குறித்து பாகிஸ்தான் கவலை கொண்டுள்ளது. மேலும், விரிவாக்கப்பட்ட வெளிநாட்டு நலன்களைக் கொண்டு, சர்வதேச அளவில் இந்தியா வளர்ந்து வருவதையும், அமெரிக்காவுடனான உறவு வளர்ந்து வருவதையும் பாகிஸ்தான் கவலையுடன் பார்க்கிறது.

சர்வதேச நாடுகளால் தனிமைப்படுத்தப்படுகிற நிலையில், பாகிஸ்தான் தனது கவனத்தை சீனா மீது திருப்புவதற்கு வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com