

இஸ்லமாபாத்,
அமெரிக்கா இரட்டை கோபுர தாக்குதலுக்கு பொறுப்பேற்ற அல் கொய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார். பாகிஸ்தானில் இருந்த அவரை அமெரிக்கா கடந்த 2011- ஆம் ஆண்டு அதிரடியாக பாகிஸ்தான் சென்று சுட்டுக்கொன்றது.
பாகிஸ்தானில் ஒசாமா பதுங்குவதற்கு உதவி அளித்ததாக அப்போது பாகிஸ்தானின் உளவுத்துறை இயக்குநராக பதவி வகித்த இஜாஸ் ஷா மீது குற்றம் சுமத்தப்பட்டது. பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் பர்வேஷ் முஷரப்பின் நம்பிக்கைக்கு உரியவராகவும் இஜாஸ் ஷா விளங்கினார்.
இந்த நிலையில், இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் மந்திரி சபையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரியாக இஜாஸ் ஷா பதவியேற்றுள்ளார். இஜாஸ் ஷாவுக்கு பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் அல்வி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னதாக, இஜாஸ் ஷாவை மந்திரிசபையில் இணைக்க பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பாகிஸ்தானின் பிரதான எதிர்க்கட்சிகளில் ஒன்றான பாகிஸ்தான் மக்கள் கட்சி, முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ கொலையில் இஜாஸ் ஷா பங்களிப்பு இருப்பதாக கூறி கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது.