

நியூயார்க்,
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு பிரிட்டிஸ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் புறப்பட தயாராக இருந்தது. அப்போது விமானத்தில் இருந்த பயணி ஒருவர் கழிவறைக்குள் சென்றார்.
அப்போது அங்கு தோட்டாக்கள் நிரப்பப்பட்ட துப்பாக்கி இருந்ததை கண்டு அவர் அதிர்ந்தார். உடனடியாக அவர் இது குறித்து விமான ஊழியர்களிடம் தெரியப்படுத்தினர்.
இந்த சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது. இதையடுத்து, விமான நிலையத்தில் இருந்த போலீசார் விரைந்து வந்து அந்த துப்பாக்கியை கைப்பற்றினர்.
அப்போது அந்த துப்பாக்கியுடன் 2 பாஸ்போர்ட்டுகளும் கிடைத்தன. அதில் ஒன்று இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூனுடையது. மற்றொன்று அவரது பாதுகாவலருடையது.
டேவிட் கேமரூனின் பாதுகாவலர் தனது துப்பாக்கியை கழிவறையில் மறந்து வைத்துவிட்டுச் சென்றார் என்பது தெரியவந்தது. இதையடுத்து விமானத்துக்கு எந்த வித அச்சுறுத்தலும் இல்லை என்பது உறுதியானது.
அதனை தொடர்ந்து, சுமார் 1 மணி நேர தாமதத்துக்கு பிறகு விமானம் லண்டனுக்கு புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் குறித்து டேவிட் கேமரூனின் பாதுகாவலரிடம் விசாரணை நடத்தப்படும் என நியூயார்க் நகர போலீசார் தெரிவித்துள்ளனர்.