நேபாளம் முதல் இந்தியா வரை பெருவெள்ளம் ஏற்பட்ட ஆற்றின் பயணப்பாதை..

போட்டே கோசி ஆற்றில் உருவாகி கண்டக் ஆறு வரை தாக்கத்தை செலுத்தும்.
பெருவெள்ளம்
Published on

நேபாளத்தின் வடக்கு எல்லையான ரசுவா மாவட்டத்தில், இமயமலைப் பகுதிகளில் பனிமலைகள் உடைப்பு காரணமாக கோசி, திரிசூலி நதிகளில் வரலாறு காணாத வகையில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மலைச்சரிவுகளில் இருந்து கரைபுரண்டு வந்த வெள்ளநீர் கிராமங்கள், பாலங்கள் மற்றும் முக்கிய நீர்மின் திட்டங்களை அடித்துச் சென்று பேரழிவை ஏற்படுத்தியது. ஆற்றுப் படுகையை ஒட்டியுள்ள அடுக்குமாடிக் கட்டடங்கள் நொடிப்பொழுதில் வெள்ளத்தில் சரிந்து விழுந்தன. பெரும்பாலான பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதுதொடர்பான ஏராளமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நேபாள ஆற்றில் ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கு இந்தியாவின் பீகார், உத்தரபிரதேசத்திலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேபாள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் இந்தியாவில் அதன் தாக்கம் உணரப்படுவது ஏன் என்று நினைக்கலாம்? அது குறித்த விவரங்கள் பின்வருமாறு: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் ஆதிமூலம் திபெத். அங்கு ஏற்பட்ட பேரிடர் நேபாளம் வழியாகக் கடந்து திரிசூலி நதி அமைப்பில் கலக்கும். அதாவது போட்டே கோசி ஆற்றில் உருவாகி கண்டக் ஆறு வரை தாக்கத்தை செலுத்தும்.

கோசி, கண்டக் ஆறுகள் நேபாளம் மட்டுமல்ல இந்தியாவிலும் ஓடுகின்றன. அதனால்தான் நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கை அடுத்து பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் உஷார் நிலைக்குச் சென்றுள்ளன. இது ஓர் எல்லை கடந்த அச்சுறுத்தலாக உருவாகியுள்ளது.

இந்தியாவுக்குள் நுழைந்ததும் கண்டக் என்று இந்த ஆறு அழைக்கப்படும். கண்டக் ஆறு பீகார் மாநிலத்தில் சென்று கங்கையுடன் சங்கமிக்கிறது. பீகாரின் சாம்ப்ரான் மாவட்டம் வழியாகப் பாயும் இந்த ஆறு, சிவான், சரண், கோபால்கஞ்ச், பாட்னா மாவட்டங்கள் வழியாகச் செல்கிறது. பக்சர் மாவட்டம் அருகே கங்கையுடன் இந்த நதி சங்கமிக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com