அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதி... உலக நாடுகள் வரவேற்பு

இரு நாடுகளுக்கு இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதி... உலக நாடுகள் வரவேற்பு
Published on

வாஷிங்டன்,

போர்

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. அமெரிக்காவுடனான மோதலை தொடர்ந்து ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.

அதேவேளை, ஈரானின் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முடக்கியது. இதனால் ஈரானுக்கு சரக்கு, கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்வது பாதிக்கப்பட்டது. இதனிடையே, அமெரிக்கா, ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. பின்னர், இரு நாடுகளுக்கு இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

அமைதி ஒப்பந்தம்

இந்நிலையில், பேச்சுவார்த்தையில் அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அமெரிக்கா, ஈரான் அறிவித்துள்ளது. இதன் மூலம் கடந்த சில மாதங்களாக அமெரிக்கா, ஈரான் இடையே நிலவி வந்த மோதல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, துருக்கி உள்பட பல்வேறு நாடுகளின் முயற்சியால் ஈரான் , அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

அமைதி ஒப்பந்தப்படி இரு நாடுகளும் மோதலை நிரந்தரமாக கைவிட வேண்டும். ஈரான் துறைமுகங்களை முடக்கியுள்ள அமெரிக்க படைகள் உடனடியாக திரும்பப்பெறப்பட வேண்டும். ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் திறக்க வேண்டும். இது கச்சா எண்ணெய் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வர வழிவகுக்கும். இந்த அமைதி ஒப்பந்தம் வரும் வெள்ளிக்கிழமை (19ம் தேதி) சுவிட்சர்லாந்தில் வைத்து அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாக உள்ளது.

இந்த ஒப்பந்தப்படி, அனைத்து தரப்பும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான 60 நாட்களில் ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகள் அனைத்தும் இரு தரப்பும் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், லெபனானில் ஹிஸ்புல்லா ஆயுதக்குழு மீதான தாக்குதலையும் இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகள் வரவேற்பு

இந்த நிலையில், அமெரிக்கா - ஈரான் இடையே இறுதி ஆகியுள்ள அமைதி ஒப்பந்தத்திற்கு ஐநா அமைப்பு, மத்திய கிழக்கு நாடுகள் உட்பட பல்வேறு தரப்பும் வரவேற்பு தெரிவித்துள்ளது. ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்து பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா-ஈரான் இடையே எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கத்தார் பிரதமர் வரவேற்றதோடு, அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார். இந்த மோதலை நிறுத்த ராஜதந்திர முயற்சிகளில் கத்தார் ஒரு பங்கை வகித்ததுடன், சமரசம் செய்ய ஈடுபட்ட முக்கிய நாடுகளில் ஒன்றாகவும் இருந்தது என தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறுகையில், “ அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டதற்கு வாழ்த்துகள். உடனடி மற்றும் நிரந்தர போர்நிறுத்தம், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது, அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும். மேலும், இந்த ஒப்பந்தத்தை எளிதாக்க உதவியதற்காக பாகிஸ்தான், கத்தார், எகிப்து, சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பிற பிராந்திய நாடுகளுக்கு குட்டெரெஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

வரலாற்று சாதனை

ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தத்தை வரலாற்றுச் சாதனை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் இது பிராந்தியத்திற்கு "அமைதியையும் பாதுகாப்பையும்" கொண்டுவரும் என்றும், உலகின் மிக முக்கியமான எரிசக்தி கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க வழிவகுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com