

பெகாசஸ் மென்பொருளை நியாயப்படுத்துகிறது...
பெகாசஸ் உளவுமென்பொருளைப் பயன்படுத்தி உலகத்தலைவர்களின் செல்போன் உரையாடல்கள், குறுந்தகவல்கள், படங்கள், இமெயில்கள் உளவு பார்க்கப்படுவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று வெளியான தகவல்கள் உலகை உலுக்கி உள்ளன.இந்தத் தகவல்கள் வெளியானதிலிருந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தொடங்கி பிரான்ஸ் அதிபர் மேக்ரான்வரை உலகத்தலைவர்கள் பலருக்கும் தூக்கம் கெட்டது. பலரும் செல்போன்களையும், எண்களையும் பதற்றத்துடன் மாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் பெகாசஸ் மென்பொருளை உருவாக்கியுள்ள இஸ்ரேல் நிறுவனம் என்.எஸ்.ஓ. குழுமம், தனது உளவுமென்பொருளை நியாயப்படுத்தி உள்ளது.
மக்கள் நிம்மதியாக தூங்குகிறார்கள்...
இதுகுறித்து அந்த நிறுவனம் கூறி இருப்பதாவது:-
உலகமெங்கும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் இரவிலே நிம்மதியாக தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். பாதுகாப்பாக தெருக்களில் நடந்து கொண்டிருக்கிறார்கள். பெகாசஸ் உளவு மென்பொருளுக்கு நன்றி.
இதுபோன்ற உளவு தொழில்நுட்பமானது குற்றங்களை தடுக்கவும், புலனாய்வு செய்யவும், பயங்கரவாதத்தை தடுக்கவும் உளவு அமைப்புகளுக்கும், சட்ட அமலாக்க அமைப்புகளுக்கும் உதவியாக அமைந்துள்ளது.
ஒழுங்குமுறைத்தீர்வு இல்லை....
உலகமெங்கும் உள்ள சட்ட அமலாக்கல் அமைப்புகள் இருளில் இருக்கின்றன. உடனடி செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் தீங்கு ஏற்படுத்தும் செயல்களை கண்காணிக்க அனுமதிக்கும் வகையில் எந்தவொரு ஒழுங்குமுறைத்தீர்வும் இல்லை.எனவேதான் என்.எஸ்.ஓ. நிறுவனம் உலகின் பல இணைய புலனாய்வு நிறுவனங்களுடன் கரம் கோர்த்துக்கொண்டு, அரசுகளுக்கு இணைய புலனாய்வு கருவிகளை வழங்குகிறது.
நாங்கள் இயக்கவில்லை
என்.எஸ்.ஓ. நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை இயக்கவில்லை. வாடிக்கையாளர்களால் சேகரிக்கப்படுகிற தரவுகளை நாங்கள் பார்க்கவும் வழி இல்லை. ஒரு பாதுகாப்பான உலகை உருவாக்குவதற்கு நாங்கள் எங்களால் முடிந்த சிறப்பானதை செய்கிறோம்.
இவ்வாறு அந்த நிறுவனம் கூறி உள்ளது.