

ஐ.நா. நிபுணர்கள்
இஸ்ரேலை சேர்ந்த என்.எஸ்.ஓ. குழுமம் என்ற நிறுவனம், பகாசஸ் என்ற உளவு மென்பொருளை உருவாக்கி உள்ளது. அந்த மென்பொருள் பல்வேறு நாடுகளுக்கு விற்கப்பட்டதால், உலகம் முழுவதும் மனித உரிமைவாதிகள் உள்பட ஆயிரக்கணக்கானோரின் செல்போன்கள் உளவு பார்க்க திட்டமிடப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த விவகாரம் குறித்து ஐ.நா. மனித உரிமை நிபுணர்கள் 8 பேர், என்.எஸ்.ஓ. குழுமத்துடனும், இஸ்ரேல் அரசுடனும் தொடர்பு கொண்டு தகவல் திரட்டி வருகிறார்கள்.
இந்தநிலையில், அந்த நிபுணர்கள் இதுகுறித்து கூறியதாவது:-
சட்டவிரோத கண்காணிப்பு, தனியுரிமையில் தலையீடு, அடிப்படை உரிமைகளுக்கு அச்சுறுத்தல் ஆகியவற்றில் இருந்து மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது நாடுகளின் கடமை என்று சர்வதேச மனித உரிமை சட்டம் கூறுகிறது.
நிறுத்த வேண்டும்
ஆனால், அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இதுபோல் உளவு பார்ப்பது கவலை அளிக்கிறது. தனது உளவு மென்பொருள் பயன்பாட்டால், மனித உரிமைகளுக்கு ஏற்பட்ட தாக்கம் குறித்து என்.எஸ்.ஓ. குழுமம் ஆய்வு செய்துள்ளதா என்பதை அந்நிறுவனம் தெரிவிக்க வேண்டும். உளவு மென்பொருள் பயன்படுத்துவது, சர்வதேச மனித உரிமை விதிமுறைகளுக்கு உடன்பட்டு இருக்கும்வகையில் புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். அதுவரை உளவு மென்பொருள் விற்பதையும், பரிமாறிக் கொள்வதையும் எல்லா நாடுகளும் நிறுத்தி வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.