

வாஷிங்டன்,
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் ஒரு மாத காலத்தை கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், உக்ரைனில் முதன்முறையாக ரஷிய படைகளால் கைப்பற்றப்பட்ட முக்கிய நகரமான கெர்சன், இப்போது ரஷிய படைகளின் பிடியிலிருந்து விடுபட்டுள்ளது என்று அமெரிக்காவின் பென்டகன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மறுமுனையில், ரஷிய ராணுவ பொதுப்பணியாளர்களின் செயல்பாட்டு இயக்குநரக தலைவர் மேஜர் ஜெனரல் செர்ஜி ருட்ஸ்காய் கூறுகையில், கெர்சன் பகுதி இன்னும் எங்கள் முழு கட்டுப்பாட்டில் தான் உள்ளது" என்று கூறினார். ஒரு பெரிய உக்ரேனிய எரிபொருள் தளத்தை ரஷிய படைகள் அழித்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
உக்ரேனியப் படைகள் இப்போது கெர்சனில் கடுமையாகப் போரிட்டு, அங்கு ரஷிய படைகளைப் பின்னுக்குத் தள்ளி வருகின்றன.கெர்சனில் உக்ரைன் பெறும் வெற்றி, ரஷியாவிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படும். மேலும், உக்ரைனுக்குச் செல்வதற்காக, ஜார்ஜியாவில் இருக்கும் தனது படைகளை ரஷியா பின்வாங்க தொடங்கியது என்று பென்டகன் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.