மக்கள் ஊரடங்கு: இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு

மக்கள் ஊரடங்கு தொடர்பாக, இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.
மக்கள் ஊரடங்கு: இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு
Published on

வாஷிங்டன்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கின்போது மக்கள் அனைவரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் பணிசெய்து வரும் டாக்டர்கள், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும்படி பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

அதன்படி நாடு முழுவதும் மக்கள் அனைவரும் கைகளை தட்டியும், மணியோசை எழுப்பியும் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர். இதுதொடர்பாக மத்திய தகவல் செய்திதொடர்பு துறையின் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு இருந்தது. இதனை பாராட்டியுள்ள அமெரிக்க தெற்கு-மத்திய ஆசியாவிற்கான இணை அமைச்சர் ஆலிஸ் ஜி வெல்ஸ், தனது டுவிட்டர் பக்கத்திலும் அந்த வீடியோவை பகிர்ந்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், வைரசுக்கு எதிரான போராட்டத்தில் அத்தியாவசிய பணிகளை செய்துவரும் டாக்டர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு இந்திய மக்கள் அனைவரும் வாழ்த்து தெரிவிப்பது எழுச்சியூட்டுவதாக அமைந்துள்ளது என்றார்.

இதற்கிடையில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங், இந்திய தொழில் நிறுவனங்களின் அதிகாரிகளிடம் காணொலி காட்சியின் மூலம் உரையாடினார். அப்போது நெருக்கடியான இந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டியதற்கு நன்றி தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com