பணய கைதிகளை விடுவிக்க கோரி இஸ்ரேலில் மக்கள் ஆர்ப்பாட்டம்


பணய கைதிகளை விடுவிக்க கோரி இஸ்ரேலில் மக்கள் ஆர்ப்பாட்டம்
x

60 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கு டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது. இதற்கு பதிலடியாக, காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காசா பகுதியில் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்து 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், பணய கைதிகளில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்துள்ளது. முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் மார்ச் 1-ந்தேதியுடன் முடிவடைந்தது. 2-வது கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் உள்ளது.

இந்த சூழலில், காசாவில் சிறை பிடித்து வைக்கப்பட்டு உள்ள பணய கைதிகளில் 10 பேர் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என டிரம்ப் கூறினார். அதற்கான நம்பிக்கை உள்ளது என்றும் கடந்த வெள்ளி கிழமை நடந்த இரவு விருந்தின்போது கூறினார்.

கடந்த 6-ந்தேதி முதல், தோஹாவில் பேச்சுவார்த்தைக்கான முயற்சி நடந்து வருகிறது. 60 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கு டிரம்பும் முயற்சி மேற்கொண்டு வருகிறார். எனினும், இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து வருகிறது.

இந்த சூழலில், 50 பணய கைதிகளை உயிருடனோ அல்லது அவர்களின் உடல்களையோ திரும்ப கொண்டு வரவேண்டும் என்றும், போரை முடிவுக்கு கொண்டு வர ஒரு விரிவான ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் கோரி இஸ்ரேலில் மக்கள் பெருமளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் கைகளில் இஸ்ரேல் கொடிகளை ஏந்தியபடியும், பேனர்களையும் ஏந்தியபடியும், ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 More update

Next Story