

லண்டன்,
இங்கிலாந்து நாட்டில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அங்கு தற்போது பைசர்-பையோ என்டெக் தடுப்பூசி, ஆக்ஸ்போர்டு-ஆஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி மற்றும் மாடர்னா ஆகிய 3 நிறுவனங்களின் தடுப்பூசிகளும் பயன்பாட்டில் உள்ளன.
தற்போது இங்கிலாந்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தடுப்பூசி போடுவதற்கான அனுமதி வழங்குவது பற்றி முடிவு எடுக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பைசர்-பையோ என்டெக் தடுப்பூசி நிறுவனம் இங்கிலாந்து அரசிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில் 12 முதல் 15 வயது உடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது மூலம் அவர்களின் உடலில் ஏற்படும் எதிர்ப்பு சக்தி குறித்த ஆய்வு முடிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பைசர்-பையோ என்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தங்கள் நிறுவனத்தின் தடுப்பூசியை 12 முதல் 15 வயது வரை உள்ள 2,260 சிறுவர்கள் மீது சோதனை செய்யப்பட்டதாகவும், அதில் 100 சதவீதம் அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் உண்டாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் 2 முதல் 11 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்த ஆய்வு முடிவுகளை செப்டம்பர் மாதம் வெளியிட உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து அரசிடம் ஆய்வு முடிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் அனுமதி அளித்தால் இங்கிலாந்தில் 12 முதல் 15 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகளுக்கான பைசர்-பையோ என்டெக் நிறுவனத்தின் தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.