

அட்டோவா,
கனடாவில் இதுவரை 4,35,330 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை 12,983 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவின் 2-வது அலையை தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தை கனடா மக்களுக்கு செலுத்த கனடா அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இங்கிலாந்து, பஹ்ரைன் ஆகிய நாடுகளில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தை பொதுமக்களுக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கனடாவிற்கு பைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்து விரைவில் வந்து சேரும் என்று அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். முதலில் 30,000 டோஸ்கள் வரவழைக்கப்பட்டு, அவற்றை பொதுமக்களுக்கு செலுத்தும் பணி தொடங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.