ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட நட்சத்திரங்கள் உருவாகும் பகுதியின் புகைப்படம் - நாசா வெளியிட்டது

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட நட்சத்திரங்கள் உருவாகும் ஒரு பகுதியின் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.
Image Courtesy : @NASAWebb twitter
Image Courtesy : @NASAWebb twitter
Published on

வாஷிங்டன்,

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான 'நாசா' கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 25-ந்தேதி உலகின் மிகப்பெரிய சக்தி மற்றும் திறன் வாய்ந்த 'ஜேம்ஸ் வெப்' விண்வெளி தொலைநோக்கியை, பிரெஞ்ச் கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏரியன் 5 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

இந்திய மதிப்பில் சுமார் 75 ஆயிரம் கோடி என்ற மிகப்பெரிய பட்ஜெட்டில் பல ஆண்டுகளாக கடினமாக உழைத்து ஆய்வாளர்கள் இந்த தொலைநோக்கியை உருவாக்கியுள்ளனர். நிலவில் இருந்து மூன்று மடங்கு தொலைவுக்கு சென்று, சூரியனை சுற்றியவாறு தனது ஆய்வுப்பணியை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மேற்கொண்டு வருகிறது.

பிரபஞ்சம் குறித்து இதுவரை நாம் அறியாத தகவல்களை, இந்த தொலைநோக்கி மூலம் நம்மால் இனி வரும் காலங்களில் தெரிந்து கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதன்படி ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட பேரண்டங்களின் திரள்கள் அடங்கிய புகைப்படங்களை கடந்த ஆண்டு நாசா வெளியிட்டது.

இந்நிலையில் தற்போது இந்த தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட, விண்வெளியில் நட்சத்திரங்கள் உருவாகும் ஒரு பகுதியின் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. விண்வெளியில் நட்சதிரங்கள் உருவாகும் பகுதி நெபுலா என்று அழைக்கப்படுகிறது. தற்போது எடுக்கப்பட்டுள்ள என்.ஜி.சி. 346 எனப்படும் இந்த பகுதியானது பூமியில் இருந்து சுமார் 2 லட்சம் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

இந்த புகைப்படத்தில் நட்சத்திரங்கள் உருவாகும் பகுதியானது ரிப்பன்களின் திரள்களைப் போல் காட்சியளிக்கிறது. நட்சத்திரங்கள் உருவாகும் போது மிகப்பெரிய அளவிலான தூசுப்படலங்களையும், வாயுக்களையும் அதனுடன் சேர்த்துக் கொள்வதால் இத்தகைய ரிப்பன் திரள் போன்ற தோற்றம் ஏற்படுவதாகவும், இதனை ஆய்வு செய்வதன் மூலம் நமது சூரியன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் எவ்வாறு தோன்றியது என்பது குறித்த தகவல்களையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

NASA Webb Telescope (@NASAWebb) January 11, 2023 ">Also Read:

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com