நாகா முன்னோர்களின் உடல் எச்சங்கள்: ஆக்ஸ்போர்டு அருங்காட்சியகம் முறைப்படி ஒப்படைப்பு

இவற்றில் பல, காலனித்துவ ராணுவ நடவடிக்கைகளின் போது பறிமுதல் செய்யப்பட்டவை என்பதை அருங்காட்சியகம் ஒப்புக்கொண்டுள்ளது.
நாகா முன்னோர்களின் உடல் எச்சங்கள்: ஆக்ஸ்போர்டு அருங்காட்சியகம் முறைப்படி ஒப்படைப்பு.
முன்னோர்களின் உடல் எச்சங்கள்
Published on: 

லண்டன்,

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது நாகாலாந்திலிருந்து கொண்டு சென்ற 39 நாகா பழங்குடியின முன்னோர்களின் உடல் எச்சங்களை, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள பிட் ரிவர்ஸ் அருங்காட்சியகம் முறைப்படி திருப்பி ஒப்படைத்துள்ளது.

ஆக்ஸ்போர்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பிட் ரிவர்ஸ் அருங்காட்சியகத்தில் கடந்த 9-ம் தேதி அன்று இந்த ஒப்படைப்பு நிகழ்வு நடைபெற்றது. அருங்காட்சியக இயக்குநர் பேராசிரியர் லாரா வான் ப்ரோகோவன் முன்னிலையில், அதிகாரப்பூர்வ ஆவணங்களில் கையெழுத்திடப்பட்டு இந்த எச்சங்கள் ஒப்படைக்கப்பட்டன. இவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக நாகா நல்லிணக்கத்திற்கான மன்றம் மற்றும் நாகா பழங்குடியினர் அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 30 பிரதிநிதிகள் இங்கிலாந்து சென்றிருந்தனர்.

காலனித்துவ காலத்துப் பின்னணி

கடந்த 1910 முதல் 1940 வரையிலான பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், ஜான் ஹென்றி ஹட்டன் மற்றும் ஜேம்ஸ் பிலிப் மில்ஸ் ஆகிய பிரிட்டிஷ் நிர்வாகிகள் மற்றும் மானுடவியலாளர்களால் இந்த எச்சங்கள் (பெரும்பாலும் மண்டை ஓடுகள்) நாகாலாந்திலிருந்து சேகரிக்கப்பட்டன. இவற்றில் பல, காலனித்துவ ராணுவ நடவடிக்கைகளின் போது பறிமுதல் செய்யப்பட்டவை என்பதை அருங்காட்சியகம் ஒப்புக்கொண்டுள்ளது.

6 ஆண்டுகாலத் தொடர் முயற்சி

கடந்த 2020-ஆம் ஆண்டு பிட் ரிவர்ஸ் அருங்காட்சியகம் தனது காட்சிப்படுத்தலில் இருந்து அனைத்து மனித எச்சங்களையும் அகற்றியது. அதைத் தொடர்ந்து, முன்னோர்களின் எச்சங்களைத் தாயகம் மீட்டுக் கொண்டு வர நாகா அமைப்புகள் கடந்த ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. மொத்தம் 40 எச்சங்கள் கோரப்பட்ட நிலையில், நாகா சமூகத்தைச் சேர்ந்தவை என உறுதிப்படுத்தப்பட்ட 39 எச்சங்களைத் திருப்பி அனுப்ப ஜூலை 2026-ல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகக் குழு ஒப்புதல் அளித்தது.

நாகாலாந்தில் கூட்டு நினைவிடம்

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அந்நிய மண்ணில் இருந்த முன்னோர்களின் எச்சங்கள், இங்கிலாந்திலிருந்து விமானம் மூலம் நாகாலாந்தின் திமாபூருக்குக் கொண்டு வரப்படுகின்றன. அங்கு புதிதாக அமைக்கப்பட உள்ள கூட்டு நினைவிடத்தில், பழங்குடியினர் பாரம்பரிய மற்றும் அரசு மரியாதையுடன் இவை அனைத்தும் ஒன்றாக அடக்கம் செய்யப்பட உள்ளன.

X