வானில் விமானத்தில் பறந்து 'யூ.ஏ.இ. 55' என எழுதிய விமானி

ஐக்கிய அரபு அமீரகத்தின் 55-வது தேசிய தினம் அடுத்த மாதம் 2-ந் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
வானில் விமானத்தில் பறந்து 'யூ.ஏ.இ. 55' என எழுதி விமானி
முகம்மது அல் அமீரி
Published on: 

அபுதாபி,,

அமீரகத்தின் 55-வது தேசிய தினத்திற்கு வித்தியாசமான முறையில் மரியாதை செலுத்தும் விதமாக, வானில் விமானத்தில் பறந்து 'யூ.ஏ.இ. 55' என எழுதி அமீரக விமானி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

அமீரக தேசிய தினம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் 55-வது தேசிய தினம் அடுத்த மாதம் (டிசம்பர்) 2-ந் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நாட்டிற்கு தங்களது அன்பையும், நன்றியையும் வெளிப்படுத்தும் விதமாக பலரும் வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறிய ரக விமானம்

அந்த வகையில், அமீரகத்தை சேர்ந்த முகம்மது அல் அமீரி என்ற விமானி வினோதமான முறையில் தனது தேசப்பற்றை வெளிப்படுத்த திட்டமிட்டார். அதன்படி, ராசல் கைமா விமான போக்குவரத்து மன்ற நிலையத்தில் இருந்து 'டெக்னம் பி 2008' (Tecnam P2008) என்ற சிறிய ரக விமானத்தை எடுத்துக்கொண்டு தனியாக வானில் பறந்தார்.

வானில் 'யூ.ஏ.இ. 55' என எழுதி சாதனை

ஒற்றை என்ஜின் கொண்ட அந்த இலகு ரக விமானத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக வானில் வட்டமடித்தார். அப்போது, முதலில் 'யூ.ஏ.இ.' (UAE) என்ற ஆங்கில எழுத்துக்களையும், அதனைத் தொடர்ந்து '55' என்ற எண்களையும் வானில் மிகத் துல்லியமாக வரைவது போல் விமானத்தை இயக்கினார். பின்னர், அவர் பாதுகாப்பாக புறப்பட்ட இடத்திற்கே வந்து தரையிறங்கினார்.

ரேடார் வரைபட தளம்

விமானம் சென்ற பாதை 'பிளைட் அவேர்' என்ற ரேடார் வரைபட தளத்தில் துல்லியமாக பதிவாகியிருந்தது. அதில் 'யூ.ஏ.இ. 55' என்ற எழுத்துக்கள் மிக தெளிவாகவும், அழகாகவும் வரையப்பட்டிருந்தது. மிக நேர்த்தியான திட்டமிடல் மற்றும் திறமையான பயிற்சியால் மட்டுமே இத்தகைய சாகசத்தை நிகழ்த்த முடியும்.

சமூக வலைதளங்களில் வைரல்

இதுதொடர்பான ரேடார் வரைபட காட்சிகளை விமானி முகம்மது அல் அமீரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

X