ஆஸ்திரேலியாவில் இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளித்த வானம்...!

ஆஸ்திரேலியாவில் நேற்று முன்தினம் வானம் இளஞ்சிவப்பு நிறமாக காட்சியளித்தது.
ஆஸ்திரேலியாவில் இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளித்த வானம்...!
Published on

கான்பெரா,

ஆஸ்திரேலியாவில் உள்ள மில்துரா நகரத்தில் நேற்று முன்தினம் வானம் இளஞ்சிவப்பு நிறமாக காட்சியளித்தது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர்.

இது தொடர்பாக படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. வானம் திடீரென இளஞ்சிவப்பு நிறமாக காட்சியளித்ததற்கு ஏலியன்கள் தான் காரணம் என்றும், சிலர் அமானுஷ்ய நாடகத் தொடரில் வருவது போல் உள்ளது என பலவிதமாக கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், இந்த இளஞ்சிவப்பு ஒளியானது அந்த பகுதியில் செயல்பட்டு வரும் கேன் குழுமத்திற்கு சொந்தமான கஞ்சா பண்ணையில் இருந்து வந்ததாக அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும், கஞ்சா செடிகள் வளர்வதற்கு பல்வேறு வகையான ஒளி தேவைப்படுவதாகவும். குறிப்பாக செடி துளிர்விடும் போதும், பூக்கும் பருவத்திலும் இது போன்ற இளஞ்சிவப்பு விளக்குகள் பயன்படுத்தப்படும் என தெரிவித்தனர்.

இந்த நிலையில், இதுகுறித்து கேன் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் ரோக் கூறுகையில், இது ஒரு புதிய வசதி, இந்தாண்டு முதல் செயல்பாட்டிற்கு வந்தள்ளது. இது மிகவும் அற்புதமான மற்றும் அதிநவீன தொழில்நுட்பமாகும். இந்த தொழில்நுட்பத்தில் நாங்கள் எல்.இ.டி விளக்குகளை பயன்படுத்துகிறோம்.

நேற்று இதனை புதிய அறையில் வைத்து சோதனை செய்து கொண்டிருந்தோம். வழக்கமாக சூரியன் மறையும் போது நாங்கள் விளக்குகளை அணைத்து விடுவோம். ஆனால் நேற்று சோதனை செய்து கொண்டிருந்ததால் விளக்குகளை அணைக்கவில்லை. சோதனை முடிந்த பிறகு இரவு 7 மணிக்கு விளக்குகளை அணைத்து விட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய நிறுவனமான கேன் குரூப் லிமிடெட், மருத்துவ மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக கஞ்சா செடிகளை பயிரிடுவதற்கான உரிமம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com