

வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோர் கலந்துகொண்ட இரவு உணவு விழாவில் திடீரென துப்பாக்கிசூடு நடந்தது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் மேடையில் இருந்த ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் மெலானியா டிரம்ப் ஆகியோரை பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றினர்.
இந்த சம்பவத்தில் டிரம்ப் மற்றும் மெலானியாவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், அவர்கள் நலமாக இருப்பதாகவும் தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக அங்குள்ள ஓட்டல் வளாகத்திற்குள் 5 முதல் 8முறை பலத்த வெடிச்சத்தம் கேட்டதாக அங்கிருந்த ஒரு புகைப்படக்கலைஞர் தெரிவித்தார். இந்தச் சத்தம் விருந்து நடைபெற்ற பிரதான அரங்கிற்குள் கேட்கவில்லை என்றாலும், துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் ஊடுருவி இருப்பதாக வெளியான ஆரம்பகட்ட தகவல்களால் அங்கிருந்த விருந்தினர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
விருந்தில் பங்கேற்ற சுமார் 2,600 பேர் "கீழே படுங்கள்!".. "கீழேயே இருங்கள்!" என்ற எச்சரிக்கை கூச்சலைக் கேட்டவுடன், அச்சத்தில் அங்கிருந்த மேஜைகளின் அடியில் தஞ்சமடைந்தனர். அதே சமயம், ஜனாதிபதி டிரம்ப் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்த பாதுகாப்பு அதிகாரிகள், முழுமையான பாதுகாப்பு கவசங்களுடன் அந்த இடத்தைக் கைப்பற்றி நிலைமையை சீர்செய்ய உடனடியாக உணவு அறைக்குள் விரைந்தனர். பாதுகாப்புப் படையினர் அந்த பகுதி முழுவதையும் சோதனையிட்ட பின்னர், அமைச்சரவையின் முக்கிய உறுப்பினர்கள் ஒவ்வொருவராக அந்த இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் உயிருடன் பிடிபட்டுள்ளார். துப்பாக்கிசூடு நடத்தியதாகக் கூறப்படும் நபர் பிடிபட்டதை டிரம்ப் உறுதிப்படுத்தினார். இதனிடையே துப்பாக்கிசூடு நடத்தியவரை டிரம்ப்பின் பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகி இருந்தது. தற்போது அது உண்மையில்லை என்று தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிசூடு நடத்தி கைதான நபரின் புகைப்படத்தை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், “நெறிமுறையின்படி, நாங்கள் இந்த வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று சட்ட அமலாக்கத் துறை கேட்டுக்கொண்டுள்ளது, அதன்படி நாங்கள் உடனடியாக வெளியேறினோம். இன்னும் 30 நிமிடங்களில் வெள்ளை மாளிகையின் பத்திரிகையாளர் சந்திப்பு அறையிலிருந்து நான் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தவிருக்கிறேன். முதல் பெண்மணி, துணை ஜனாதிபதி மற்றும் அனைத்து அமைச்சரவை உறுப்பினர்களும் நல்ல உடல்நிலையில் உள்ளனர். இன்னும் அரை மணி நேரத்தில் நாங்கள் உங்களுடன் பேசுவோம். இந்த நிகழ்வுக்கு பொறுப்பான அனைத்துப் பிரதிநிதிகளுடனும் நான் பேசியுள்ளேன், மேலும் 30 நாட்களுக்குள் நாங்கள் இதை மறுதிட்டமிடுவோம்” என்று அதில் தெரிவித்துள்ளார்.