

வாஷிங்டன்,
கோவையை அடுத்த சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து கடந்த 8ந்தேதி காலை 11.30 மணிக்கு முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் பயணித்த ஹெலிகாப்டர் புறப்பட்டது. இந்த ஹெலிகாப்டர் குன்னூரில் உள்ள ராணுவ பயிற்சி மைதானத்தில் இருக்கும் சிப்கானா கிளப்பில் தரையிறங்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. இதனால் அங்கு தீயணைப்பு வாகனம் தயாராக இருந்தது.
இந்த நிலையில் ஹெலிகாப்டர் மேட்டுப்பாளையம் அருகே சென்றபோது பனிமூட்டம் அதிகமாக இருந்து உள்ளது. இந்த ஹெலிகாப்டர் எம்.ஐ.17 வி 5 வகை என்பதால் பனிமூட்டத்திலும் செல்லக்கூடிய வசதி இருப்பதால் தொடர்ந்து சென்றதாக கூறப்படுகிறது.
மேட்டுப்பாளையத்தை கடந்து சென்றபோது ஹெலிகாப்டர் தள்ளாடியபடி சென்று உள்ளது. மேலும் பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் ஹெலிகாப்டர் உயரத்தில் பறக்கவில்லை. தாழ்வாக பறந்து சென்றது.
குன்னூர் காட்டேரி பூங்கா அருகே உள்ள இப்சேட் எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போது அங்கும் பனிமூட்டம் பரவி இருந்தது. இந்த நிலையில் திடீரென்று அங்கு இருந்த 40 அடி உயரம் கொண்ட மரத்தில் ஹெலிகாப்டரின் இறக்கை மோதியது.
அதன் வால்பகுதியும் மற்றொரு மரத்தில் மோதியது. தொடர்ந்து மற்றொரு மரத்திலும் மோதிய ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீப்பிடித்தது. இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிந்து, அவர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரம் வரையே வாகனங்கள் செல்ல முடியும்.
எனவே அங்கு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டது. அங்கிருந்து உள்ளே சென்ற மீட்பு படையை சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை துணியில் கட்டி டோலி போன்று தூக்கியபடி ஆம்புலன்ஸ் நின்ற பகுதிக்கு கொண்டு வந்தனர்.
இந்த ஹெலிகாப்டர் ஒயிட் பெட்ரோலில் இயங்கக்கூடியது. இதனால், தீப்பிடித்ததும் சுமார் 40 அடி உயரத்துக்கு மளமளவென தீ எரிந்தது. அத்துடன் பல அடி உயரத்துக்கு கரும்புகை சென்றது. இதில் அங்கிருந்த 40 அடி உயரமான 3 மரங்களும் சேதமானது. சுமார் 3 மணி நேரம் தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
இந்த கோர விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி, அவரின் மனைவி மதுலிகா ராவத் மற்றும் உயர் ராணுவ அதிகாரிகள் என அந்த ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை தொடர்பு கொண்ட அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன், ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் பிறரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கொண்டார்.
இதுபற்றி பிளிங்கன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஜெனரல் பிபின் ராவத் ஒரு வலிமையான தலைவராக இருந்தவர். அவரது மறைவு நம்முடைய இரு நாடுகளுக்கும் பேரிழப்பு ஆகும் என்று தெரிவித்து உள்ளார்.