

டொரோண்டோ,
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், 8 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். தனது பயணத்தின் முதற்கட்டமாக கனடா சென்றுள்ள நிர்மலா சீதாராமன், அந்நாட்டின் தலைநகர் டொராண்டோவில் நடைபெற்ற உயர்மட்ட வர்த்தக வட்டமேசை மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார்.
தொடர்ந்து கனடாவின் நிதி மற்றும் தேசிய வருவாய் மந்திரி பிரான்கோயிஸ்-பிலிப் ஷாம்பெய்னுடன், தொடக்கப் பொருளாதார மற்றும் நிதிசார் கலந்துரையாடலில் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். இந்த கலந்துரையாடலின்போது எல்லை தாண்டிய பணப் பரிமாற்றங்கள் மற்றும் வணிக கட்டணங்கள் தொடர்பான நிலவரங்களை ஆராய்வதற்காக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பங்குதாரர்கள் இடையிலான ஒத்துழைப்பை ஆதரிப்பதற்கு இருநாட்டு மந்திரிகளும் ஒப்புக்கொண்டனர்.
அதோடு இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம், சுற்றுலா, கல்வி மற்றும் சிறு-நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்காக கனடாவில் யு.பி.ஐ. சேவையின் பயன்பாட்டை அதிகரிக்க அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும், இருதரப்புப் பொருளாதார மற்றும் நிதிசார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சியாக, 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் 'விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம்' (CEPA) தொடர்பான பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்யவும், 'இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம்' குறித்த பேச்சுவார்த்தைகளை விரைவில் தொடங்க இந்தியாவும் கனடாவும் விரும்புவதாக இருநாட்டு மந்திரிகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.