அமெரிக்காவில் நடுவானில் விமானத்தில் தீ; என்ஜின் பாகங்கள் உடைந்து விழுந்ததால் பரபரப்பு

அமெரிக்காவில் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் விமானத்தின் என்ஜினில் தீ பற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் விமானியின் சாதுரியத்தால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.
அமெரிக்காவில் நடுவானில் விமானத்தில் தீ; என்ஜின் பாகங்கள் உடைந்து விழுந்ததால் பரபரப்பு
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கொலோரோடா மாகாணத்தின் தலைநகர் டெனவர் விமான நிலையத்தில் இருந்து யுனெடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777-200 ரக விமானம் நேற்று முன்தினம் மதியம் புறப்பட்டது.

231 பயணிகள் மற்றும் 10 சிப்பந்திகளுடன் ஹவாய் மாகாணத்தின் தலைநகர் ஹோனாலுலுவுக்கு விமானம் புறப்பட்டு சென்றது.

புறப்பட்ட சிறிது நேரத்துக்குப்பிறகு நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தின் வலது புற என்ஜினில் திடீரென தீ பற்றியது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென பரவி என்ஜின் முழுவதும் பற்றி எரிந்தது.

இதனால் விமானம் நடுவானில் திணறியது. பயணிகள் அனைவரும் பயத்தில் மரண ஓலமிட்டனர்.

என்ஜின் பாகங்கள் உடைந்து விழுந்தன

இதனிடையே என்ஜினில் தீப்பற்றி எரிவதை அறிந்து கொண்ட விமானி உடனடியாக விமானத்தை டெனவர் விமான நிலையத்துக்கு திருப்பி அவசரமாக தரையிறக்க முடிவு செய்தார்.

அதன்படி அவர் விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு விமானத்தை திருப்பினார்.

இதற்கிடையில் விமானம் டெனவர் விமான நிலையத்துக்கு செல்லும் வழியில் விமானத்தின் என்ஜின் பாகங்கள் ஒவ்வொன்றாக கீழே விழுந்தன. இவை விமான நிலையத்தையொட்டியுள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்தன.

வானில் பறந்து கொண்டிருந்த போதே விமானத்தின் பாகங்கள் ஒவ்வொன்றாக உடைந்து விழுந்தது பயணிகள் மத்தியில் பெரும் பதற்றத்தையும் பீதியையும் ஏற்படுத்தியது.

விமானியின் சாதுரியத்தால்...

எனினும் விமானி மிகவும் சாதுரியமாக செயல்பட்டு விமான நிலைய ஓடுபாதையில் விமானத்தை பாதுகாப்பாக தரை இறக்கினார். அதனைத் தொடர்ந்து அங்கு தயார் நிலையில் இருந்த தீயணைப்பு வீரர்கள் என்ஜினில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

அதன் பின்னர் பயணிகள் மற்றும் சிப்பந்திகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமானியின் சாதுரியத்தால் பயணிகள் அனைவரும் காயங்கள் எதுவும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

என்ஜினில் தீ பற்றிய விமானம் 26 ஆண்டுகள் பழமையானது என்றும் என்ஜினில் உள்ள மின் விசிறியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ பற்றியதாகவும் கூறப்படுகிறது.

தரையில் சிதறிக் கிடக்கும் பாகங்கள்

எனினும் இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் தரையில் சிதறி கிடக்கும் என்ஜின் பாகங்களை யாரும் தொட வேண்டாம். இந்த பாகங்கள் ஆய்வுக்கு தேவைப்படுகிறது' என உள்ளூர் மக்களுக்கு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த 2018-ம் ஆண்டு யுனெடெட் நிறுவனத்தின் போயிங் 777 விமானம் ஹோனலுலு நகர விமான நிலையத்தில் தரை இறங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் என்ஜின் செயலிழந்தது. அப்போதும், விமானிகள் திறம்பட செயல்பட்டு விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர் என்பது நினைவு கூறத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com