ஓடுபாதையில் மோதிக்கொண்ட விமானங்கள்: அமெரிக்க ஏர்போர்ட்டில் பரபரப்பு

மியாமி விமான நிலையத்தில் 2 விமானங்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது
ஏர்போர்ட்
ஏர்போர்ட்
Published on: 

வாஷிங்டன்,

அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு விமானமும், பயணிகள் விமானமும் தரையில் சென்றுகொண்டிருந்தபோது ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக விமானிகளுக்கும் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலின் ஆடியோ வெளியாகியுள்ளது.அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு சுமார் 9.15 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றது. பனாமா நாட்டின் தலைநகர் பனாமா சிட்டியில் இருந்து வந்த கோபா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 ரக பயணிகள் விமானமும், கொலம்பியாவின் பொகோட்டா நகருக்குச் செல்ல தயாராக இருந்த யுபிஎஸ் நிறுவனத்தின் போயிங் 767 ரக சரக்கு விமானமும் இதில் மோதிக்கொண்டன.

எப்படி நடந்தது விபத்து?

இரு விமானங்களும் விமான நிலையத்தில் ஓடுபாதையை ஒட்டியுள்ள பார்க்கிங் பகுதியை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

சரக்கு விமானம், பயணிகள் விமானத்துக்கு வழிவிட வேண்டும் என்று விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், சரக்கு விமானம் தொடர்ந்து முன்னேறியதால் பயணிகள் விமானத்தின் இறக்கை உரசியதாக கூறப்படுகிறது.

வெளியான பரபரப்பு ஆடியோ!

இந்தச் சம்பவத்தின்போது விமானிகளுக்கும் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் பயணிகள் விமானத்தின் விமானி, "யாரோ எங்கள் விமானத்தை இடித்துவிட்டார்கள்" என்று கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.இதையடுத்து சரக்கு விமானத்தின் விமானியை தொடர்புகொண்ட கட்டுப்பாட்டு அதிகாரி, "யுபிஎஸ் 358, அந்த விமானத்துக்கு நீங்கள் வழிவிட வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டுள்ளார்.

தொடர்ந்து, "அந்த விமானத்தை நீங்கள் இடித்துவிட்டீர்களா?" என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.அதற்கு சரக்கு விமானத்தின் விமானி, "ஆம், நாங்கள் சற்று தூரம் முன்னே சென்றுவிட்டோம். அதன் இறக்கை எங்கள் விமானத்தின் மீது மோதிவிட்டது" என்று பதிலளித்துள்ளார். இந்த உரையாடல் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.

2 பேருக்கு காயம்

இந்தச் சம்பவத்தில் 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும், அவர்களுக்கு விமான நிலையத்திலேயே மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டும், தாமதமாகியும் இருந்தன.இந்த நிலையில், மியாமி விமான நிலையத்தில் 2 விமானங்கள் மோதிக்கொண்ட சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது

X