குரோஷியா சென்றடைந்தார் பிரதமர் மோடி - விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

குரோஷியா பிரதமர் பென்கொவிக் விமான நிலையத்திற்கு நேரில் சென்று பிரதமர் மோடியை வரவேற்றார்.
குரோஷியா சென்றடைந்தார் பிரதமர் மோடி - விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
Published on

சாக்ரெப்,

பிரதமர் மோடி அரசு மத்திய கிழக்கு நாடான சைப்ரஸ், கனடா மற்றும் ஐரோப்பிய நாடான குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி முதலாவதாக சைப்ரஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டார்.

அதனை தொடர்ந்து பிரதமர் மோடி கனடா சென்றார். கனடாவின் கன்னாஸ்கிஸ் நகரில் நடந்த ஜி-7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் கனடா பிரதமர், இத்தாலி, பிரான்ஸ் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார்.

கனடா பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அங்கிருந்து குரோஷியா புறப்பட்டார். இந்நிலையில், குரோஷியா விமான நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குரோஷியா பிரதமர் பென்கொவிக் விமான நிலையத்திற்கு நேரில் சென்று பிரதமர் மோடியை வரவேற்றார்.

இது தொடர்பாக பென்கொவிக் தனது 'எக்ஸ்' வலைதல பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சாக்ரெப்பிற்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றோம்! உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவின் பிரதமர் முதல் முறையாக குரோஷியா வந்துள்ளார். ஒரு முக்கியமான புவிசார் அரசியல் தருணத்தில் இந்த வருகை நிகழ்ந்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

குரோஷியா பயணத்தின்போது அந்நாட்டின் ஜனாதிபதி சோரன் மிலனொவ்வை சந்தித்து பிரதமர் மோடி பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது இந்தியா-குரோஷியா இடையே பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com