

பிரஸ்டிலாவா,
அரசு முறை பயணமாக பிரதமர் மோடி 2 ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது பயணத்தின் முதல் நாடாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி அந்நாட்டின் நைஸ் நகர் சென்றார். அங்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரானை பிரதமர் மோடி சந்தித்தார்.
இதையடுத்து பிரான்சில் இருந்து பிரதமர் மோடி ஸ்லோவாக்கியா சென்றுள்ளார். 2 நாட்கள் பயணமாக ஸ்லோவாக்கியா சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு ஜனாதிபதி பெல்கிரினியையும், பிரதமர் பிகோவையும் சந்திக்கிறார்.
இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், சர்வதேச அரசியல் சூழ்நிலை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.
ஸ்லோவாக்கிய பயணத்தை நிறைவு செய்யும் பிரதமர் மோடி நாளை மீண்டும் பிரான்ஸ் செல்கிறார். பிரான்சில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். பின்னர், ஜி7 நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்திக்கிறார். இதையடுத்து, 18ம் தேதி பாரிசில் நடைபெறும் தொழில்நுட்பம் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதனை தொடர்ந்து அன்றைய தினமே பிரதமர் மோடி இந்தியா திரும்புகிறார்.