

விக்டோரியா
செஷல்ஸ் நாட்டில் பிரதமர் மோடி மரக்கன்று நட்டதுடன், உலகின் மிக வயது முதிர்ந்த உயிரினத்திற்கு உணவளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்திய பெருங்கடலில் தீவு நாடாக செஷல்ஸ் அமைந்துள்ளது. அந்நாட்டின் 50-ம் ஆண்டு தேசிய தினம் வருகிற 29-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார்.
இதற்காக பிரதமர் மோடி செஷல்ஸ் நாட்டிற்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். விமானம் மூலம் செஷல்ஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றடைந்த பிரதமர் மோடியை, அந்நாட்டின் அதிபர் பேட்ரிக் ஹெர்மினி நேரில் சென்று வரவேற்றார். தொடர்ந்து பிரதமர் மோடிக்கு செஷல்ஸ் அரசு சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
செஷல்ஸ் தேசிய தின கொண்டாட்த்தில் இந்திய கடற்படையின் 2 கப்பல்கள் மற்றும் பாதுகாப்பு படைப்பிரிவினர் கலந்து கொள்ள உள்ளனர். பிரதமர் மோடி தனது பயணத்தின்போது செஷல்ஸ் அதிபர் பேட்ரிக்குடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
மேலும் செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பிரதமர் மோடி, அங்குள்ள இந்திய வம்சாவளியினரை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடுகிறார். கடந்த 2015-ம் ஆண்டு செஷல்ஸ் நாட்டிற்கு சென்றிருந்த பிரதமர் மோடி, அந்த நாட்டிற்கு மேற்கொள்ளும் 2-வது பயணம் இதுவாகும்.
இந்த நிலையில், செஷல்ஸ் ஜனாதிபதி பேட்ரிக் ஹெர்மினி மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவரும் விக்டோரியாவில் உள்ள தேசிய தாவரவியல் பூங்காவுக்கு இன்று சென்றனர்.
அவர்கள் இருவரும் பூங்கா வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டனர். பிரதமர் மோடி மரக்கன்றை நட்டு, தண்ணீர் விட்டனர். இதேபோன்று, உலகின் மிக வயது முதிர்ந்த உயிரினம் என அறியப்படும் ஜோனாதன் என்ற ஆமைக்கு பிரதமர் மோடி உணவளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இதன்பின்பு, வனப்பாதுப்பு பணியாளருடன் பிரதமர் மோடி உரையாடினார். அப்போது ஹெர்மினி மற்றும் பிரதமர் மோடி இருவருக்கும், அந்த சரணாலயத்தின் தனித்துவம் வாய்ந்த தாவர வகைகள் மற்றும் விலங்கினங்கள் ஆகியவை பற்றி அவர்கள் விளக்கி கூறினர்.