

புதுடெல்லி,
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து அரபு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ நிலைகள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனிடையே ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டது. இதனால் அந்த வழியாக எண்ணெய் சரக்கு கப்பல்கள் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதன் விளைவாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
இந்த நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் இன்று உரையாடியுள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“ஈரான் அதிபர் டாக்டர் மசூத் பெசெஷ்கியானுடன் தொலைபேசியில் பேசி ரம்ஜான் மற்றும் நவ்ரூஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். இந்த பண்டிகைக் காலம் மேற்கு ஆசியாவிற்கு அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பைக் கொண்டுவரும் என நம்பிக்கை தெரிவித்தேன்.
பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாகவும், உலகளாவிய விநியோக சங்கிலிகளை சீர்குலைக்கும் வகையிலும் மேற்காசிய பிராந்தியத்தின் முக்கிய உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்தேன்.
கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும், கப்பல் வழித்தடங்கள் திறந்தும், பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்வதன் அவசியத்தையும் மீண்டும் வலியுறுத்தினேன். ஈரானில் உள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கான ஈரானின் தொடர்ச்சியான ஆதரவுக்கு பாராட்டு தெரிவித்தேன்.”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.