

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி மலேசியா சென்றுள்ளார். மலேசியாவில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றார். தலைநகர் கோலாலம்பூரில் வசித்து வரும் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமுடன் இணைந்து பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
உலக அளவில் இந்திய வம்சாவளியினர் அதிகம் வசிக்கும் நாடுகளில் மலேசியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினரில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் ஆவர். இதனைத் தொடர்ந்து, அந்த நிகழ்ச்சியில் தமிழ் உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி தனது உரையைத் தொடங்கினார். அப்போது, தமிழ் மொழியின் சிறப்புகளை அவர் வெகுவாக பாராட்டிப் பேசினார்.
தனது சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளான இன்று, பிரதமர் மோடி மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, பொருளாதாரம் மற்றும் புதுமை உள்ளிட்ட துறைகளில் கூட்டாண்மையை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இந்தியா–மலேசியா இடையே செமிகண்டக்டர் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை உள்ளடக்கிய பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.