

வாஷிங்டன்,
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள குவாட் என்னும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாடு, வாஷிங்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி, அந்த நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, வாஷிங்டனில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனை சந்தித்து பேசினார். இருவரும், இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார, ராணுவ உறவுகளை வலுப்படுத்துவது பற்றி தீவிரமாக ஆலோசித்தனர். இந்த சந்திப்புக்கு பின், 'டுவிட்டரில்' பிரதமர் அலுவலகம் வெளியிட்ட பதிவில், இந்திய - ஆஸ்திரேலிய பிரதமர்கள், குவாட் மாநாடு பற்றியும், இந்தோ - பசிபிக் பிராந்திய நிலைமை பற்றியும், ஆப்கானிஸ்தான் நிலைமை பற்றியும் விவாதித்தனர் என்று கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்திய - ஆஸ்திரேலிய பிரதமர்களின் சந்திப்பு, இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும். கொரோனா, தட்பவெப்ப மாற்றம் ஆகிய சவால்களை இரு நாடுகளும் இணைந்து எதிர்கொள்வது பற்றி, இருவரும் தீவிரமாக விவாதித்தனர் என்று தெரிவித்துள்ளது.