

ஜகர்தா,
பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா, சிங்கப்பூர் மலேசியா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதன் முதல் பகுதியாக அவர் இந்தோனேஷியா நாட்டிற்கு நேற்றிரவு சென்றார். அதன்பின் அவர் இன்று அந்நாட்டு அதிபருக்கான அரண்மனைகளில் ஒன்றான மெர்டெகா அரண்மனைக்கு சென்றார். அவரை இந்தோனேஷிய அதிபர் விடோடோ வரவேற்றார். பிரதமர் மோடிக்கு அங்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது.
இரு நாட்டு தலைவர்களுக்கு இடையேயான உயர்மட்ட அளவிலான முறைப்படியான பேச்சுவார்த்தைக்கு முன் இருவரும் சந்தித்து பேசி கொண்டனர்.
இதன்பின்னர் அதிபர் விடோடோ மற்றும் பிரதமர் மோடி இருவரும் முறைப்படி வர்த்தகம், முதலீடு மற்றும் கடற்பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பு பற்றி ஆலோசனை மேற்கொள்கின்றனர்.
இந்தோனேஷியாவின் ஜகர்தா நகரில் உள்ள கலிபாட்டா தேசிய வீரர்களுக்கான கல்லறைக்கும் பிரதமர் மோடி சென்றார். அந்நாட்டின் விடுதலைக்கு போராடி உயிர் நீத்தவர்கள் அங்கு புதைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு பிரதமர் மோடி மலரஞ்சலி செலுத்தினார்.
இந்தோனேசியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே 70 ஆண்டு காலமாக ராஜ்யரீதியிலான உறவு உள்ளது. இந்த பயணத்தின்போது இந்தோனேசியாவுடன் பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா பல ஒப்பந்தங்களை செய்து கொள்ளும். இந்தோனேசியாவுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.