‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என ஐ.நா. சபையில் முழங்கிய மோடி

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற சங்ககால தமிழ் பாடலை மேற்கோள் காட்டி பேசினார்.
‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என ஐ.நா. சபையில் முழங்கிய மோடி
Published on

நியூயார்க்,

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபையின் 74-வது கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று உரையாற்றினார்.

அப்போது அவர், 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவின் சங்ககால புலவரான கணியன் பூங்குன்றனார் தமிழில் யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று பாடியுள்ளார். அதற்கு அனைத்து இடங்களும் நமது ஊர்கள் தான், உலகில் உள்ள அனைவரும் நமது உறவுகள் தான் என்று அர்த்தம். அதன்படி இந்த உலகத்தை ஒரு குடும்பமாக பார்ப்பது தான் இந்தியாவின் பண்பாடு என்று கூறினார்.

கூட்டத்தில் தொடர்ந்து அவர் பேசியதாவது:-

உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாக கருதப்படும் இந்திய தேர்தலில் மக்கள் எங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியுள்ளனர். அவர்கள் சார்பாக நான் உரையாற்ற வந்துள்ளேன்.

பயங்கரவாதத்தை ஒழிக்க உலகம் ஒருங்கிணைந்து போராட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஐ.நா.வின் முக்கிய கொள்கை மீதான வன்முறை மற்றும் பயங்கரவாதத்தின் நேரடி தாக்குதலால் உலகம் பிரிந்து காணப்படுகிறது. நான் புத்தர் பிறந்த பூமியில் இருந்து வருகிறேன், யுத்தம் பிறந்த பூமியில் இருந்து அல்ல.

ஒட்டுமொத்த உலகமே காந்தியின் 150-வது பிறந்த நாளை கொண்டாடிவருகிறது. அவரது உண்மை மற்றும் அகிம்சை கொள்கை இன்றைக்கும் உலகின் அமைதி, வளர்ச்சி ஆகியவற்றுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது.

எங்களுக்கு அமைதிக்கான போதனை வழங்கப்பட்டுள்ளது. அதனாலேயே பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் குரல் பொதுவான கோபமாக எதிரொலிக்கிறது. பயங்கரவாதம் ஒரு நாட்டுடன் தொடர்புடைய பிரச்சினை அல்ல, அந்த சவாலை ஒட்டுமொத்த உலகமே எதிர்கொள்கிறது.

கடந்த 5 ஆண்டுகளாக இந்தியா தனது நூற்றாண்டு பழமையான பாரம்பரியமான, நாடுகள் இடையே சகோதரத்துவத்தை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டது.

ஒரு வளர்ந்துவரும் நாடு 5 ஆண்டுகளில் 11 கோடி கழிவறைகளை கட்டிமுடித்து உலகின் மிகப்பெரிய சுகாதார இயக்கத்தை வெற்றிகரமாக செய்து இந்த உலகுக்கு ஒரு தகவலை வழங்கியுள்ளது. ஐ.நா. கட்டிடத்தின் சுவர்களில் பிளாஸ்டிக் பேனர்கள் இல்லை. இந்தியாவும் ஏற்கனவே பிளாஸ்டிக் ஒழிப்புக் கான இயக்கத்தை தொடங்கிவிட்டது.

இந்தியா வளம்பெறும்போது, இயற்கையாகவே இந்த உலகம் வளம் பெறும். இந்தியா வலுப்பெறும்போது இந்த உலகம் வலுப்பெறும். 2 முக்கிய உலக சவால்களில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. ஒன்று நீர் சேகரிப்பு மற்றொன்று ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்துள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

அவரது பேச்சை கேட்பதற்காக ஐ.நா. அரங்கின் வெளியேயும் ஏராளமான இந்தியர்கள் கூடியிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com