ஆபரேஷன் சிந்தூர்: அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி பேச்சு


ஆபரேஷன் சிந்தூர்: அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 18 Jun 2025 10:39 AM IST (Updated: 18 Jun 2025 11:17 AM IST)
t-max-icont-min-icon

'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் துல்லியமாக தாக்கி அழித்தது.

கனடா,

காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக மே 7-ந்தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கி வந்த 9 பயங்கரவாத முகாம்களை 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் இந்திய ராணுவம் துல்லியமாக தாக்கி அழித்தது.

இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவானது. எல்லையில் 4 நாட்களுக்கு இருநாட்டு படைகளுக்கு இடையே மோதல் நீடித்தது. பின்னர் இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 10-ந்தேதி சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. அதற்கு அமெரிக்காதான் காரணம் என்றும், இந்தியா, பாகிஸ்தானுடன் வர்த்தகத்தை நிறுத்துவதாக மிரட்டி, சண்டை நிறுத்தம் கொண்டு வந்தேன் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பேட்டி அளித்தார்.

வர்த்தகத்தை முன்னிறுத்தி அமெரிக்கா மிரட்டியதால் சண்டை நிறுத்தம் ஏற்பட்டதாக டிரம்ப் கூறியதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்தது. வர்த்தகம் பற்றி அமெரிக்க அதிகாரிகளுடன் பேசப்படவில்லை. பாகிஸ்தானுடனான பிரச்சினையில் இந்தியாவின் நிலைப்பாட்டை அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளோம் என்று மத்திய அரசு தெரிவித்தது.

இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் உரையாடியுள்ளார். ஜி7 மாநாட்டின்போது மோடி - டிரம்ப் சந்திப்பதாக இருந்த நிலையில் முன்னதாகவே டிரம்ப் புறப்பட்டுச் சென்றதால், தொலைபேசியில் பேசியுள்ளார்.

சுமார் 35 நிமிடங்கள் இருவரும் உரையாடியதாக வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இது குறித்து விக்ரம் மிஸ்ரி கூறியதாவது:- "பஹல்காம் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் இரங்கல் தெரிவித்தார். இந்தியாவின் நடவடிக்கைகள் துல்லியமானவை எனவும், பாகிஸ்தானில் இருந்து வரும் எந்தவொரு தாக்குதலுக்கும் இந்தியாவிலிருந்து வலுவான பதிலடி கொடுக்கப்படும் என்றும்- பிரதமர் மோடி டிரம்பிடம் தெரிவித்தார்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது வர்த்தக ரீதியான எந்த மத்தியஸ்தமும் நடைபெறவில்லை. பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதாலே மோதல் கைவிடப்பட்டது என அதிபர் டிரம்பிடம் பிரதமர் மோடி தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு அமெரிக்காவின் ஆதரவு எப்போதும் முழுமையாக இருக்கும் என அதிபர் டிரம்ப் உறுதி அளித்துள்ளார். மேலும் இஸ்ரேல்-ஈரான் மோதல், ரஷ்யா-உக்ரைன் மோதல் குறித்தும் விவாதித்தனர்.

மேலும் கனடா பயணத்தை முடித்துகொண்டு இந்தியா திரும்பியதும் அமெரிக்காவிற்கு வருமாறு பிரதமர் மோடியை டிரம்ப் அழைத்ததாகவும், அதற்கு பல்வேறு அலுவல்களை மேற்கோள் காட்டி வர இயலாது என்பதை பிரதமர் கூறியதாகவும் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார். தொடர்ந்து QUAD உச்சிமாநாட்டிற்கு இந்தியாவிற்கு வர டிரம்பிற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்". இவ்வாறு அவர் கூறினார்.

பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீரை இன்று அமெரிக்க அதிபர் சந்திக்க உள்ள நிலையில் இந்த உரையாடல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story