பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி இன்று இருதரப்பு பேச்சுவார்த்தை

பிரான்ஸ் மற்றும் சுலோவாக்கியா நாடுகள் விடுத்த அழைப்பின் பேரில் 6 நாள் சுற்றுப்பயணத்தை பிரதமர் மோடி தொடங்கியுள்ளார்.
பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

பிரான்ஸ் பயணம்

கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று பிரதமர் மோடி பிரதமர் ஆனார். இப்போது 3-வது முறையாக பதவியில் நீடித்து வருகிறார். அவரது அரசு 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இந்த 12 ஆண்டு காலத்தில் அவர் பல்வேறு உலகநாடுகளுக்கு சென்று வந்துள்ளார். சமீபத்தில் ஐக்கிய அரபு குடியரசு, ஹாலந்து, சுவீடன், நார்வே, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் அவர் மீண்டும் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த முறை ஐரோப்பிய கண்டத்தில் உள்ள பிரான்ஸ் மற்றும் சுலோவாக்கியா நாடுகளுக்கு செல்கிறார். இதனையடுத்து அவர் நேற்று சிறப்பு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். பிரான்சில் உள்ள நீஸ் விமான நிலையத்தை மோடி நேற்று இரவு சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மதிப்பாய்வு

பிரான்ஸ் மற்றும் சுலோவாக்கியா நாடுகள் விடுத்த அழைப்பின் பேரில் 6 நாள் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். தனது பயணத்தை நேற்று அவர் தொடங்குவதற்கு முன்பு ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை நீஸ் நகரில் சந்திக்கும் போது, பிப்ரவரி மாதத்துக்கு பிறகு, ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து மதிப்பாய்வு செய்யப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கு இடையே எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும், பரஸ்பரம் பயனளிக்கும் முக்கிய சர்வதேச விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க ஆவலுடன் காத்திருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

நீஸ் நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் இணைந்து 'பாரத் இன்னோவேட்ஸ்' நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 'இந்தியா-பிரான்ஸ் புத்தாக்க ஆண்டு' என்பதன் பின்னணியில் நடைபெறும் இந்த முக்கிய நிகழ்ச்சி, இந்தியாவின் நம்பிக்கைக்குரிய புத்தொழில் நிறுவனங்களை சர்வதேச அளவிலான முதலீடுகளுடன் இணைப்பை ஏற்படுத்தும் என்றும், இந்தியாவின் உயர்கல்விச்சூழல் அமைப்பில் இருந்து உருவாகும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு இது ஒரு உந்துசக்தியாக அமையும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

முதல் பயணம்

பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு, நீஸ் நகரில் இருந்து, நாளை (திங்கட்கிழமை) சுலோவாக்கியா நாட்டுக்கு செல்லவுள்ளதாக அந்த அறிக்கையில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

சுலோவாக்கியா 1993-ம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம், இருதரப்பு உறவில் ஏற்பட்டுள்ள வலுவான முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்தும்.

பிராட்டிஸ்லாவாவில் அந்நாட்டு அதிபர் பெல்லெக்ரினி, பிரதமர் பிகோ ஆகியோருடன் கலந்துரையாட ஆவலுடன் காத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அந்நாட்டின் வர்த்தக நிறுவன தலைவர்களுடனும் உரையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

'ஜி 7' உச்சி மாநாடு

சுலோவாக்கியாவில் இருந்து எவியன் நகருக்கு செல்லும் பிரதமர், 16 மற் றும் 17-ந் தேதிகளில் அங்கு நடைபெறும் ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில், நாட்டின் வளர்ச்சி குறித்தும், உலகின் தென்பகுதியில் உள்ள வளரும் நாடுகளின் விருப்பங்கள் குறித்தும் அவர் விரிவாக எடுத்துரைக்கிறார்.

தனது பயணத்தை 18-ந்தேதி பாரிஸ் நகரில் நிறைவு செய்வதாக தெரிவித்துள்ள பிரதமர் அங்கு பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் இணைந்து “விவாடெக் 2026" மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில், இந்தியா அமைக்கவுள்ள மாபெரும் அரங்கு, இந்தியா - ஐரோப்பிய நாடுகளின் புத்தாக்கச்சூழல் அமைப்புகளுக்கு இடையேயான ஒத்துழைப்புக்கான மகத்தான வலிமைக்குப் பொருத்தமான அடையாளமாக இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும், பாரிசில் வசித்து வரும் இந்திய வம்சாவளியினரைச் சந்திப்பதையும் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

உறுதியான அர்ப்பணிப்பு

பிரான்ஸ், சுலோவாக்கியா நாடுகளில் மேற்கொள்ளும் இந்த பயணம், 3 ஐரோப்பா, ஜி 7 உச்சிமாநாட்டில் பங்கேற்பது போன்றவை, இந்தியாவின் ஈடுபாட்டை வலுப்படுத்தும் என்றும், தொலைதூர நாடுகளுடனான இந்தியாவின் நட்புறவுக்கான எல்லையை விரிவுபடுத்துவதில், உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் என்றும் பிரதமர் மோடி அந்த அறிக்கையில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com