கண்டியில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு; பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுரை

இலங்கையின் கண்டியில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #SriLanka #Emergency #KandyViolence
கண்டியில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு; பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுரை
Published on

கொழும்பு,

புத்த மதத்தினர், இஸ்லாமிய மதத்தினர் இடையேயான மோதல் எதிரொலியாக இலங்கையில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இலங்கையில் கடந்த ஓராண்டு காலமாக, பெரும்பான்மையினரான புத்த மதத்தினருக்கும், சிறுபான்மை இனத்தவராகிய இஸ்லாமிய மதத்தினருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இஸ்லாமியர்கள் மத மாற்றம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன், புத்த தொல்பொருள் இடங்களை சேதப்படுத்தி வருவதாகவும் புத்த மதத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர். மியான்மரில் புத்த மதத்தினருக்கும், சிறுபான்மை ரோஹிங்யா முஸ்லிம்களுக்கும் பிரச்சினை உள்ள நிலையில், ரோஹிங்யா முஸ்லிம்கள் இலங்கையில் தஞ்சம் அடைவதற்கும் புத்த மதத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் மத்திய கண்டி மாவட்டத்தில் இரு மதத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் உயிரிழந்தனர். கண்டியில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒருவரின் கடை தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவங்களைத் தொடர்ந்து அங்கு கலவரம் மூண்டது. இதன்காரணமாக தெல்தெனியா பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதே போன்று பல இடங்களில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் நடந்து உள்ளன. இது சிறிசேனா அரசுக்கு தலைவலியாக அமைந்தது.

இந்த நிலையில் கொழும்பு நகரில் அதிபர் சிறிசேனா தலைமையில் நேற்று மந்திரிசபையின் சிறப்பு கூட்டம் நடந்தது. அதில் புத்த மதத்தினருக்கும், இஸ்லாமிய மதத்தினருக்கும் இடையே, நாட்டில் பரவலாக ஏற்பட்டு வருகிற மோதல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் முடிவில், நாடு முழுவதும் நெருக்கடி நிலையை அமல்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதுபற்றி சமூக அதிகாரம் அளிப்பு துறை மந்திரி எஸ்.பி. திசநாயகா கூறியதாவது: இலங்கையில் நாடு முழுவதும் 10 நாட்கள் நெருக்கடி நிலை அமலில் இருக்கும். நாட்டின் பல பாகங்களிலும் ஏற்பட்டு வருகிற வன்முறையை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக அரசு அறிவிக்கை வெளியிடப்படுகிறது. கலவர பாதிப்பு உள்ள இடங்களில் போலீசாரும், ராணுவத்தினரும் குவிக்கப்படுகின்றனர். அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படும். 10 நாட்கள் முடிந்தபிறகு நெருக்கடி நிலையை மேலும் நீட்டிப்பதா, வேண்டாமா என்பதை அதிபர் சிறிசேனா முடிவு செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.

பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் மூலம் கலவரத்தை தூண்டுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இலங்கையில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டாலும் சில பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதாக அல்-ஜெசீரா செய்தி வெளியிட்டு உள்ளது.

இலங்கையின் கண்டியில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது என அந்நாட்டு மீடியா செய்தி வெளியிட்டு உள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக அடுத்தக்கட்ட உத்தரவு வரும் வரையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளநிலையில் அமைதியை பராமரிக்கும் வகையில் பொதுமக்கள் தங்களுடைய வீடுகளிலே இருக்க அரசு கோரிக்கை விடுத்து உள்ளது. மோதல்கள் சமூக வலைதளங்களில் போலியான தகவல்கள் பரப்பப்பட்டதாலே பரவியது என குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில் பாதுகாப்புத்துறை உத்தரவின் பெயரில் அங்கு சமூக வலைதளங்கள் தீவிர கண்காணிப்பின் கீழ் உள்ளது. சில சமூக வலைதள இணையதளங்கள் மற்றும் குறுஞ்செய்தி அப்ளிகேஷன்களை பயன்படுத்தவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கண்டியில் பாதுகாப்பிற்கு சிறப்புபடை போலீஸ் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com