

வாஷிங்டன்,
விசாரணைக்கு சென்ற இடத்தில் தன் மீது பாய்ந்த நாயை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர காவல்துறைக்கு கடந்த 13-ந்தேதி அவசர அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய பெண், தனது பக்கத்து வீட்டில் நீண்ட நேரமாக அலறல் சத்தம் கேட்பதாகவும், அங்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த அழைப்பின்பேரில் 2 காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அலறல் சத்தம் கேட்டதாக கூறப்பட்ட வீட்டிற்கு போலீசார் சென்றபோது அந்த வீட்டில் ஒரு பெண் இருந்தார். அந்த பெண்ணிடம் போலீசார் பேசிக் கொண்டிருந்தபோது வீட்டிற்குள் ஒரு நாய் இருப்பது தெரியவந்தது. அந்த நாய் போலீசாரைப் பார்த்து குறைத்ததோடு, வீட்டிற்குள் இருந்து வெளியே வர முயன்றது.
இதையடுத்து காவலர்கள் அந்த பெண்ணிடம் உடனடியாக நாயை பிடித்து உள்ளே அனுப்புங்கள் என்று கூறினர். அந்த பெண், “பயப்பட வேண்டாம், எனது நாய் ஆக்ரோஷமானது கிடையாது” என்றார். பின்னர் நாயை உள்ளே இழுத்து கதவை மூடினார்.
தொடர்ந்து அந்த பெண் கதவை திறந்து மீண்டும் வெளியே வந்தார். அவரிடம், வீட்டில் இருந்து அலறல் சத்தம் வந்தது ஏன்? என போலீசார் கேட்டபோது, என்.பி.ஏ. கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் நியூயார்க் அணி வெற்றி பெற்றதை கொண்டாடினோம் என்று அந்த பெண் தெரிவித்தார். அவரது நாய்க்கும் கூடைப்பந்து அணியின் ஜெர்சியை அணிவித்திருந்தார்.
அந்த பெண் போலீசாரிடம் பேசிக் கொண்டிருந்தபோதே, திடீரென நாய் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்துவிட்டது. அதோடு, அந்த நாய் காவலரைப் பார்த்து குறைத்து அவர் மீது பாய்வது போல சென்றது. இதனால் பதறிப்போன காவலர், உடனடியாக தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து நாயை நோக்கி 4 முறை சுட்டார். இதில் படுகாயமடைந்த நாய், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இந்த காட்சிகள் அனைத்தும் காவலர்களின் உடலில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களில் பதிவாகி உள்ளது. கண் முன்னே தனது வளர்ப்பு நாய் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டு அந்த பெண் அழுது புலம்பினார். இந்த சம்பவத்திற்கு சமூக வலைதளங்களில் விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை வருத்தம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை தலைவர் ஜிம் மெக்டொனால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வளர்ப்பு பிராணியின் இழப்பு மிகவும் துயரமானது. நாய் என்பது பலருக்கு ஒரு விலங்கு மட்டுமல்ல, அது ஒரு நண்பனாகவும், ஒரு குடும்ப உறுப்பினர் போலவும் இருக்கிறது.
ஒரு காவல் அதிகாரி தனது துப்பாக்கியை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்படுவது மிகவும் மோசமானது. இதன் காரணமாகவே, ஆபத்தான சூழ்நிலைகளை கையாள லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறையில் சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டு காவல் அதிகாரிகளுக்கு கடுமையான பயிற்சி அளிக்கப்படுகிறது.
நாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விரிவான, வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பொதுமக்களை பாதித்துள்ளது என்பதை அறிவோம். இந்த துயரமான சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிப்பதோடு, நாய்களை கையாள்வதில் காவல் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பயிற்சிகள், வழிகாட்டுதல்கள் குறித்தும் மறுஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.