

டாக்கா,
வங்காளதேசத்தில் கடந்த 2001-ம் ஆண்டு கம்யூனிஸ்டு கட்சி பேரணி நடந்தது. அப்போது அங்கு சிலர் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 8 பேர் உயிரிழந்த நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
அந்த நாட்டில் தடை செய்யப்பட்ட இயக்கமான ஹார்ஹட்-உல்-ஜிகாத் அல்-இஸ்லாமி என்ற பயங்கரவாத இயக்கம்தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டது என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் முப்தி அப்துல் ஹன்னன் உள்பட 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. முப்தி அப்துல் ஹன்னன் மற்றொரு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, கடந்த 2017-ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரில் 10 பேருக்கு மரண தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். 2 பேர் விடுவிக்கப்பட்டனர்.