விடைபெற்றார் போப் பிரான்சிஸ்: இறுதி அஞ்சலியில் உலகத் தலைவர்கள் பங்கேற்பு
50 நாடுகளின் தலைவர்கள் உள்பட 150 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பை வாடிகன் நிர்வாகம் உறுதி செய்தது.
வாடிகன் சிட்டி,
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21-ந் தேதி வாடிகனில் மரணம் அடைந்தார். அவரது உடல் கடந்த 23-ந் தேதி முதல் வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து போப் ஆண்டவரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். இதனால் புனித பீட்டர் சதுக்கம் நிரம்பி வழிந்தது. 3 நாட்களில் சுமார் 2.5 லட்சம் பேர் போப்பின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதாக கூறப்படுகிறது.
பின்னர் மாலையுடன் பொதுமக்கள் அஞ்சலி நிகழ்ச்சி நிறைவடைந்தது. பின்னர் போப் ஆண்டவரின் உடல் வைக்கப்பட்ட பெட்டி மூடி சீல் வைக்கப்பட்டது. இந்த சூழலில் இன்று (சனிக்கிழமை) உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு போப் ஆண்டவரின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது.
இதற்காக சிறப்பு வழிபாடு (திருப்பலி) நடத்தப்பட்டது. பின்னர் வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது விருப்பப்படியே அவருக்கு மிகவும் பிடித்தமான புனித மேரி பசிலிக்காவில் அடக்கம் செய்யப்படுகிறது.
இதற்காக புனித மேரி பேராலயத்தில் அவர் அடிக்கடி பிரார்த்தனை செய்யும் புனித மேரியின் படத்துக்கு அருகே எளிய முறையிலான கல்லறை ஒன்று தயாராகி இருந்தது. போப் ஆண்டவரின் உடல் புனித பீட்டர் பேராலயத்தில் இறுதிச்சடங்குகளை முடித்து புனித மேரி பசிலிக்காவுக்கு கொண்டு வந்ததும், ஏழைகள் மற்றும் கைவிடப்பட்டோரை கொண்ட ஒரு குழுவினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
போப் பிரான்சிஸ், தனது பதவிக்காலம் முழுவதும் அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டதை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருப்பதாக வாடிகன் தெரிவித்தது.
முன்னதாக உலக தலைவர்கள் ஏராளமானோர் புனித பீட்டர்ஸ் சர்ச்சில் இருந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அந்தவகையில் 50 நாடுகளின் தலைவர்கள் உள்பட 150 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பை வாடிகன் நிர்வாக உறுதி செய்தது.
இதன்படி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது மனைவியுடன் வாடிகன் நகருக்கு சென்று போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் கெயிர் ஸ்டார்மர், இளவரசர் வில்லியம், பிரேசில் அதிபர் லூலா டா சில்வா என பல நாடுளின் தலைவர்கள் வாடிகன் வந்து, இறுதி சடங்கில் பங்கேற்றனர்.
இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு வாடிகன் சென்றார். 2 நாள் பயணமாக வாடிகன் சென்ற ஜனாதிபதி, இந்திய அரசு மற்றும் மக்கள் சார்பாக பிரான்சிசுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அவருடன் சென்ற மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி கிரண் ரிஜுஜு, சிறுபான்மையினர் நலன் மற்றும் மீன்வளத்துறை, கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி ஜார்ஜ் குரியன், கோவா சட்டசபை துணை சபாநாயகர் ஜோசுவா டி ஜோசுவா ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் சா.மு.நாசர், சட்டமன்ற உறுப்பினர் இனிகோ எஸ். இருதயராஜ் ஆகிய இருவரும் வாடிகனில் நேற்று போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வாடிகன் தேவாலயத்திற்கு வெளியே அடக்கம் செய்யப்பட்ட முதல் நபர் போப் பிரான்சிஸ் ஆவார். மறைந்த போப் ஆண்டவர் தனது உயிலில், தனது கல்லறையில் "பிரான்சிஸ்கஸ்" என்ற வார்த்தையை மட்டுமே பொறிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.