போப் ஆண்டவர் உடல் இன்று அடக்கம்

உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த போப் ஆண்டவர் உடல் இன்று (சனிக்கிழமை) அடக்கம் செய்யப்படுகிறது.
போப் ஆண்டவர் உடல் இன்று அடக்கம்
Published on

வாடிகன் சிட்டி,

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21-ந் தேதி வாடிகனில் மரணம் அடைந்தார். அவரது உடல் கடந்த 23-ந் தேதி முதல் வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து போப் ஆண்டவரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர். நேற்று முனதினம் மாலை வரை 90 ஆயிரத்துக்கு அதிகமானோர் போப் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.3-வது நாளாக நேற்றும் போப் ஆண்டவரின் உடலுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல மணி நேரம் அஞ்சலி செலுத்தினர். இதனால் புனித பீட்டர் சதுக்கம் நிரம்பி வழிந்தது.

பின்னர் மாலையுடன் பொதுமக்கள் அஞ்சலி நிகழ்ச்சி நிறைவடைந்தது. பின்னர் போப் ஆண்டவரின் உடல் வைக்கப்பட்ட பெட்டி மூடி சீல் வைக்கப்பட்டது.இன்று (சனிக்கிழமை) உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு போப் ஆண்டவரின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடக்கிறது. இதற்காக சிறப்பு வழிபாடு (திருப்பலி) நடத்தப்படுகிறது.

பின்னர் வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. அவரது விருப்பப்படியே அவருக்கு மிகவும் பிடித்தமான புனித மேரி பசிலிக்காவில் அடக்கம் செய்யப்படுகிறது.இதற்காக புனித மேரி பேராலயத்தில் அவர் அடிக்கடி பிரார்த்தனை செய்யும் புனித மேரியின் படத்துக்கு அருகே எளிய முறையிலான கல்லறை ஒன்று தயாராகி வருகிறது.

போப் ஆண்டவரின் உடல் புனித பீட்டர் பேராலயத்தில் இறுதிச்சடங்குகளை முடித்து புனித மேரி பசிலிக்காவுக்கு கொண்டு வந்ததும், ஏழைகள் மற்றும் கைவிடப்பட்டோரை கொண்ட ஒரு குழுவினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.போப் பிரான்சிஸ், தனது பதவிக்காலம் முழுவதும் அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டதை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருப்பதாக வாடிகன் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com