கிறிஸ்துமஸ் 'நம்பிக்கை, அன்பு மற்றும் எதிர்பார்ப்பு ஆகியவற்றின் திருவிழா - போப் ஆண்டவர் லியோ

பூமியில் மனிதனுக்கு இடமில்லை என்றால் கடவுளுக்கும் இடமில்லை என போப் ஆண்டவர் லியோ கூறினார்.
வாடிகன்,
கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. நள்ளிரவில் வாடிகனில் செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் போப் ஆண்டவர் லியோ சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். கடந்த மே 8-ந்தேதி பதவியேற்ற போப் ஆண்டவர் லியோவின் தனது முதல் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையை நடத்தினார்.
இந்தியா, தென் கொரியா, மொசாம்பிக், பராகுவே, போலந்து, உக்ரைன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 10 குழந்தைகள் பூக்களை ஏந்தி செல்ல, பேராலயத்தில் உள்ள இயேசு பிறப்பு காட்சியை நோக்கி போப் ஆண்டவர் சென்றார். தேவாலயத்தில் நடந்த ஆராதனையில் சுமார் 6 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். தேவாலயத்துக்கு வெளியே, செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் சுமார் 5 ஆயிரம் பேர்திரண்டனர். அப்போது பெய்த பலத்த மழையில் குடைகளைப் பிடித்தபடியும், மழைக்கவசங்களை அணிந்தபடியும் திரைகளில் ஒளிப்பரப்பப்பட்ட ஆராதனையை கண்டுகளித்தனர்.
போப் ஆண்டவர் லியோ பேசியதாவது:-
பூமியில் மனிதனுக்கு இடமில்லை என்றால் கடவுளுக்கும் இடமில்லை. எங்கு மனிதனுக்கு இடமிருக்கிறதோ, அங்கு கடவுளுக்கும் இடமுண்டு. ஒரு மாட்டுக்கொட்டகை கூட ஒரு கோவிலை விட புனிதமானதாக மாறக்கூடும் தேவைப்படுபவர்களுக்கு உதவ மறுப்பது என்பது க டவுளையே நிராகரிப்பதற்குச் சமம். கிறிஸ்துமஸ் என்பது 'நம்பிக்கை, அன்பு மற்றும் எதிர்பார்ப்பு ஆகியவற்றின் திருவிழா.
பல வாரங்களாக மழை, காற்று மற்றும் குளிரில் துன்பப்பட்டு வரும் காசா மக்களைக் குறித்தும், பல்வேறு நாடுகளிலும் உள்ள அகதிகளைக் குறித்தும் அல்லது நமது நகரங்களிலேயே வீடுகளின்றி உள்ள ஆயிரக்கணக்கான மக்களைக் குறித்தும் நாம் எப்படி சிந்திக்காமல் இருப்பது. உலகப் பிரச்சினைகள் அனைத்தும் முறையான பேச்சுவார்த்தையால் மட்டுமே முடிவுக்குக் கொண்டு வர முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.






