

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 84 வயதான போப் ஆண்டவர் பிரான்சிஸ் பெருங்குடல் பிரச்சினை காரணமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக கடந்த ஜூலை மாதம் இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கெமல்லி ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்து 10 நாட்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போப் ஆண்டவர் பிரான்சிஸ் பின்னர் வாடிகன் திரும்பினார். இந்த நிலையில் அறுவை சிகிச்சைக்குப் பின் முதல் முறையாக போப் ஆண்டவர் பிரான்சிஸ் வெளிநாட்டுக்கு பயணம் செய்தார். ஹங்கேரி மற்றும் ஸ்லோவேகியா நாடுகளுக்கு செல்லும் 4 நாள் ஐரோப்பிய பயணத்தை அவர் தொடங்கினர்.
அதில் முதல் பயணமாக அதிகாலை ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்ட் சென்றார். புடாபெஸ்ட்டில் நடைபெறும் நற்கருணை பற்றிய ஒரு சர்வதேச மாநாட்டின் நிறைவு விழாவில் பங்கேற்கவே போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஹங்கேரி சென்றுள்ளார். எனினும் இந்த பயணத்தின்போது அவர் ஹங்கேரி அதிபர் மற்றும் பிரதமரையும், மத பிரமுகர்களையும் சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஆர்பன் தீவிர வலதுசாரிக் கொள்கைகளை கொண்டவர் என்பதும் அகதிகள் விவகாரம் தொடர்பான போப் ஆண்டவர் பிரான்சிசின் கொள்கைகளுக்கு எதிரானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.