

லாகூர்,
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு மீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த சூழலில், அதன்மீது 3ந்தேதி (நாளை) வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என்றால் இம்ரான்கான் அரசு கவிழும் சூழல் உள்ளது.
இந்த நிலையில், கான் அரசுக்கு மற்றொரு அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது. அக்கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பி.டி.ஐ. கட்சி விலக்கி கொண்டது. தனது ஆதரவை பி.எம்.எல்-கியூ கட்சிக்கு வழங்கியுள்ளது.
இதனை தொடர்ந்து பஞ்சாப் மாகாண முதல்-மந்திரி உஸ்மான் புஸ்தார் தனது ராஜினாமாவை மாகாண கவர்னர் சவுத்ரி முகமது சர்வாரிடம் வழங்கினார். அவரும் அதனை ஏற்று கொண்டுள்ளார்.
ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், பஞ்சாப் அமைச்சரவை கலைக்கப்பட்டது. இதனை ஜியோ டிவி தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாகாணத்தின் புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று காலை 11 மணிக்கு தொடங்கப்பட இருந்தது.
இந்த நிலையில், பஞ்சாப் மாகாண சட்டசபை செயலாளர் முகமது கான் பாட்டி இன்று கூறும்போது, பாகிஸ்தானில் புதிய பஞ்சாப் முதல்-மந்திரியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெறாது என்று கூறியுள்ளார்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய பாட்டி, இன்றைய சட்டமன்றத்தில், பஞ்சாப் மாகாண முதல்-மந்திரி தேர்தலுக்கான புதிய தேதி வெளியிடப்படும் என்று கூறினார். வேறு எந்த நடவடிக்கையும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்-மந்திரி தேர்தலுக்கான வாக்கெடுப்பை ஒத்தி வைத்ததற்கான எந்தவொரு காரணமும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், வாக்கெடுப்புக்கான தேதியை நிர்ணயிப்பது என்பது சட்டசபை சபாநாயகரின் உரிமை என்று பாட்டி கூறியுள்ளார்.