நிலவில் உருளைக்கிழங்கு சாகுபடி சாத்தியம்: விஞ்ஞானிகள் ஆய்வில் புதிய மைல்கல்!

இந்த புதிய ஆய்வின் மூலம், எதிர்கால விண்வெளி வீரர்கள் பூமியிலிருந்து சிறிய அளவிலான மண்புழு உரத்தை மட்டும் நிலவுக்கு எடுத்துச் சென்றால் போதும்.
நிலவில் உருளைக்கிழங்கு சாகுபடி சாத்தியம்: விஞ்ஞானிகள் ஆய்வில் புதிய மைல்கல்!
நிலவில் உருளைக்கிழங்கு சாகுபடி
Published on: 

வாஷிங்டன்,

எதிர்காலத்தில் நிலவுக்குச் செல்லும் விண்வெளி வீரர்கள் அங்கேயே தங்களுக்குத் தேவையான உருளைக்கிழங்கை பயிரிட்டு அறுவடை செய்வது சாத்தியமே என அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

ஆய்வின் பின்னணி

அமெரிக்காவின் ஒரேகான் மாநிலப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், நிலவின் மண்ணை ஒத்த செயற்கை மண்ணைப் பயன்படுத்தி கடந்த 18 மாதங்களாக தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். கோர்வாலிஸ் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தின் பிரத்யேக பசுமைக் குடில் ஆய்வகத்தில் இந்த சோதனை நடைபெற்றது.

வெற்றிகரமான சோதனை முடிவுகள்

உரம் சேர்க்கப்படாத வெறும் நிலவு மண்ணில் விதைக்கப்பட்ட உருளைக்கிழங்குச் செடிகள் வளராமல் குன்றிப் போயின. ஆனால், நிலவு மண்ணுடன் 30 சதவீதம் மண்புழு உரத்தை கலந்து பயிரிட்டபோது, பூமியில் வளர்வதைப் போலவே உருளைக்கிழங்குகள் முழுமையாக வளர்ந்து அறுவடைக்குத் தயாராகின. இந்த ஆய்வு முடிவுகள் கடந்த 19-ம் தேதி அன்று ‘என்பிஜே மைக்ரோகிரேவிட்டி’ (npj Microgravity) என்ற புகழ்பெற்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

ஊட்டச்சத்தும் பாதுகாப்பும்

நிலவு மண்ணில் விளைந்த இந்த உருளைக்கிழங்குகள் மனிதர்கள் உண்ணுவதற்கு முற்றிலும் பாதுகாப்பானவை என்றும், பூமியில் விளையும் உருளைக்கிழங்குகளுக்கு இணையான ஊட்டச்சத்துகளைக் கொண்டுள்ளன என்றும் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சீனாவின் முந்தைய முயற்சி

முன்னதாக, கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் சீனாவின் 'சேஞ்ச்'இ 4' (Chang'e-4) விண்கலம் நிலவின் மறுபக்கத்தில் உள்ள வோன் கார்மன் பள்ளத்தில் தரையிறங்கியது. அதில் கொண்டு செல்லப்பட்ட சிறிய மூடிய பெட்டியில் பருத்தி மற்றும் உருளைக்கிழங்கு விதைகள் வைக்கப்பட்டன. ஜனவரி 15-ஆம் தேதி பருத்தி விதை முளைத்து வரலாறு படைத்தாலும், நிலவின் இரவு நேரக் கடும் குளிரைத் (-190°C) தாங்க முடியாமல் அந்த செடி கருகியது குறிப்பிடத்தக்கது.

எதிர்காலப் பயன்

இந்த புதிய ஆய்வின் மூலம், எதிர்கால விண்வெளி வீரர்கள் பூமியிலிருந்து சிறிய அளவிலான மண்புழு உரத்தை மட்டும் நிலவுக்கு எடுத்துச் சென்றால் போதும். பின்னர் விண்வெளி நிலையத்தில் சேரும் உணவுக் கழிவுகளைக் கொண்டே நிலவிலேயே உரத்தை உற்பத்தி செய்து, சிறப்புப் பசுமைக் குடில்களுக்குள் உருளைக்கிழங்கு விவசாயம் செய்ய முடியும் என்பது நிரூபணமாகியுள்ளது.

X