

டோக்கியோ,
ஜப்பானின் வடகிழக்கே தலைநகர் டோக்கியோ அருகே இன்று மதியம் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.8 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.
இதனையடுத்து, தலைநகரை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிர்ச்சியில் செய்வதறியாமல் திகைத்தனர். தலைநகர் டோக்கியோவில் இந்த ஆண்டு ஜூலையில் 23ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 8ந்தேதி வரை ஒலிம்பிக் போட்டிகளும், ஆகஸ்டு 24ந்தேதி தொடங்கி செப்டம்பர் 5ந்தேதி வரை பாராலிம்பிக் போட்டிகளும் நடைபெற உள்ளன.
இதற்கான முன்னேற்பாடுகளை அந்நாட்டு அரசு செய்து வருகிறது. இந்த சூழலில் தலைநகர் அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. இதனை முன்னிட்டு ஜப்பானின் கடலோர பகுதிகளில் சுனாமி எச்சரிக்கைக்கான அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டன.
பொதுமக்கள் கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டனர். இந்நிலையில், அந்நாட்டு வானிலை கழகம் சுனாமி எச்சரிக்கையை வாபஸ் பெற்றுள்ளது என ஜப்பான் ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.
எனினும், தொஹோகு ஷின்கான்சென் பகுதியில் புல்லெட் ரெயில் சேவை தற்காலிக ரத்து செய்யப்பட்டு உள்ளது என்று கிழக்கு ஜப்பான் ரெயில்வே நிறுவனம் தெரிவித்து உள்ளது. இரவு 10 மணிக்கு பின்னர் புல்லெட் ரெயில் சேவை மீண்டும் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.