திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 16 பேர் பலி; 300 வீடுகள் இடிந்து சேதம்!

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சீன நிலநடுக்க நிர்வாகம் 2-ஆம் கட்ட அவசரகால மீட்பு நடவடிக்கையை உடனடியாக அமல்படுத்தியுள்ளது.
திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
Published on: 

பீஜிங்,

சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 32 பேர் காயமடைந்துள்ளதாக சீன அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆகப் பதிவு

திபெத்தின் நாக்கு (Nagqu) நகருக்கு கிழக்கே உள்ள உயர்மலைப் பகுதியில், 11 மைல் ஆழத்தில் இரவு 10.33 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தின் அதிர்வால் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. கடந்த 5 ஆண்டுகளில் இப்பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

அலறியடித்து ஓடிய மக்கள்

நிலநடுக்கம் ஏற்பட்டபோது வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பலமாக அதிர்ந்ததால் மக்கள் பீதியடைந்தனர். அவர்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி, தெருக்களிலும் வாகனங்களிலும் தஞ்சம் புகுந்தனர்.

முதன்மை நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் சிறிய அளவிலான பல தொடர் அதிர்வுகளும் ஏற்பட்டன. இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவியது.

மீட்புப் பணிகள் தீவிரம்

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள தீயணைப்புப் படையினர் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியிருக்கக்கூடியவர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நிலநடுக்கத்தின் பாதிப்பைத் தொடர்ந்து, அப்பகுதி வழியாகச் செல்லும் ரெயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சீன நிலநடுக்க நிர்வாகம் 2-ஆம் கட்ட அவசரகால மீட்பு நடவடிக்கையை உடனடியாக அமல்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளும் சேத மதிப்பீடும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com