

லண்டன்,
இங்கிலாந்து பாராளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிவுகளில் முதலில் முன்னிலை பெற்ற தொழிலாளர் கட்சியை ஆளும் கன்சர்வேட்டிங் கட்சி பின்னுக்கு தள்ளியது.
தேர்தல் முடிவுகளானது தொங்கு பாராளுமன்றம் என்ற நிலையை காட்டுகிறது. இதற்கிடையே இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கு முதல் முறையாக சிக்கிய பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். எட்ஜ்பஸ்டன் தொகுதியில் தொழிலாளர் கட்சியின் வேட்பாளராக களம் இறங்கிய பிரீத் கவுர், ஆளும் கட்சியான கன்சர்வேட்டிங் கட்சியின் வேட்பாளர் கரேலின் ஸ்க்யூரை தோற்கடித்தார். சாண்ட்வெல் கவுன்சிலராக இருந்த பிரீத் கவுர் இப்போது அந்நாட்டு பாராளுமன்றத்திற்கு எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கு எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட முதல் சீக்கிய பெண் பிரீத் கவுர் ஆவார். பிரீத் கவுர் பிறந்து, வளர்ந்தது எல்லாம் எட்ஜ்பஸ்டனில்தான். எட்ஜ்பஸ்டன் தொகுதியானது முன்னதாகவும் தொழிலாளர் கட்சியிடம்தான் இருந்தது. அப்போது அத்தொகுதியின் எம்.பி. ஜிசெலா 2,706 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தார். ஏப்ரல் 28ம் தேதி தொழிலாளர் கட்சியின் தேசிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்ற போது பிரீத் கவுர் வேட்பாளாராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஒட்டுமொத்த சீக்கிய சமூதாயமும் உடன் இருந்தது.
பிரீத் கவுர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எட்ஜ்பஸ்டனில் இருந்து எம்.பி. ஆவதற்கு வழங்கப்பட்ட வாய்ப்பினால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் பிறந்து, வளர்ந்தது எல்லாம் இங்குதான். மக்களுடன் இணைந்து கடுமையாக பணியாற்ற நான் விரும்புகின்றேன் என்றார்.