குடியுரிமைக்காக அர்ஜென்டினாவுக்கு படையெடுக்கும் ரஷிய கர்ப்பிணிகள்

அர்ஜென்டினா வரும் ரஷிய கர்ப்பிணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாக அர்ஜென்டினா அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
குடியுரிமைக்காக அர்ஜென்டினாவுக்கு படையெடுக்கும் ரஷிய கர்ப்பிணிகள்
Published on

பியூனஸ் அயர்ஸ், 

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் வசிக்கும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் அந்த நாட்டின் குடியுரிமையை பெறுவதற்கான நடைமுறைகள் எளிதாக உள்ளன. குறிப்பாக அர்ஜென்டினாவில் வெளிநாட்டு பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு உடனடியாக குடியுரிமை வழங்கப்படுகிறது. மேலும் அந்த குழந்தையின் பெற்றோரும் விரைவாக குடியுரிமை பெற முடிகிறது.

இதனால் ரஷியாவை சேர்ந்த பெண்கள் பலரும் தங்களின் பிரசவ காலத்தில் அர்ஜென்டினாவுக்கு பயணம் செய்து, அங்கு குழந்தை பெற்றுக்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த சூழலில் சமீபத்திய மாதங்களில் அர்ஜென்டினா வரும் ரஷிய கர்ப்பிணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாக அர்ஜென்டினா அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான ரஷிய கர்ப்பிணிகள் அர்ஜென்டினா வந்துள்ளதாகவும், கடந்த வியாழக்கிழமை ஒரே விமானத்தில் 33 கர்ப்பிணிகள் வந்ததாகவும் அர்ஜென்டினாவின் குடியுரிமை அதிகாரிகள் கூறினர். அவர்களில் 3 பெண்கள் முறையான ஆவணங்கள் வைத்திருக்காத காரணத்தால் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தின் கடைசி வாரங்களில் அர்ஜென்டினாவுக்கு வருவதாகவும், அவர்கள் சுற்றுலா பயணிகள் என்கிற போர்வையில் நாட்டுக்குள் நுழைவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அர்ஜென்டினாவின் பாஸ்போர்ட், ரஷிய பாஸ்போர்ட்டை விட அதிக சுதந்திரத்தை தருவதால் ரஷிய பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு அர்ஜென்டினா குடியுரிமையை பெற விரும்புவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது, ரஷியர்கள் 87 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் பயணிக்க முடியும். ஆனால் அர்ஜென்டினா குடியுரிமை பெற்றவர்கள் 171 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com