

ஜெருசலேம்,
இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை.
‘நெசட்’ என்று அழைக்கப்படும் இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் விறுவிறுப்பாக நடைபெற்றது. அங்கு மொத்தம் உள்ள 73.3 லட்சம் வாக்காளர்களில், சுமார் 56.9 லட்சம்(77.7 சதவீதம்) பேர் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். குறிப்பாக இஸ்ரேலில் உள்ள அரபு குடிமக்கள் அதிக அளவில் வாக்கு செலுத்தியுள்ளனர்.
தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி கடந்த அக்டோபர் 28-ந்தேதி நடைபெற்றது. இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மொத்தம் 120 இடங்கள் உள்ள நிலையில், ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 61 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்த தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணிக்கும், முன்னாள் ராணுவ தளபதி காடி ஐசென்கோட் தலைமையிலான கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
நெதன்யாகு அணிக்கு 53 இடங்களும், ஐசென்கோட் தலைமையிலான எதிர்க்கட்சி அணிக்கு 48 இடங்களும் கிடைத்துள்ளதாக இஸ்ரேல் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனிடையே தேர்தலில் போட்டியிட்ட அரபு கட்சிகள் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை யாருக்கும் கிடைக்கவில்லை.
இதன் காரணமாக இஸ்ரேலில் புதிய அரசு அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் பல வாரங்களுக்கு நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி அரசு அமையாவிட்டால், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 90 நாட்களுக்குள் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலின் அதிகாரப்பூர்வ முடிவுகளை அந்நாட்டின் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் ஏற்றுக்கொண்டார். மேலும், புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைகளை தொடங்க உள்ளதாக அவர் கூறினார்.