வெளிநாடுகளில் இருந்து அமெரிக்கா வருபவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அதிபர் ஜோ பைடன் உத்தரவு

வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வருபவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து அமெரிக்கா வருபவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அதிபர் ஜோ பைடன் உத்தரவு
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக 78 வயதான ஜோ பைடன் நேற்று முன்தினம் பதவி ஏற்றார். அமெரிக்க ஜனாதிபதியாக வாஷிங்டன் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் வந்து அமர்ந்த முதல் நாளிலேயே ஜோ பைடன் செயல்பட தொடங்கி விட்டார்.

ஒரே நாளில் அவர் அதிரடியாக 15 நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்தார். அவற்றில் பல உத்தரவுகள் முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் உத்தரவுகளை மாற்றி அமைத்தது ஆகும். ஜோ பைடன் பிறப்பித்த முதல் உத்தரவு, 100 நாட்களுக்கு அமெரிக்கர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். அமெரிக்காவின் மத்திய அரசு இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதாகும்.

மேலும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த அவர் அடுக்கடுக்கான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வருபவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அதிபர் பைடன் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவுக்கு வரும் முன்னர் விமான நிலையத்திலேயே கொரோனா இல்லை என்ற சான்றிதழை பயணிகள் சமர்ப்பிக்க வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் அனைத்து பயணிகளும் மத்திய நோய் தடுப்பு கட்டுப்பாட்டு அமைப்பின் விதிகளை பின்பற்றி சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். அமெரிக்காவுக்குள் நுழைபவர்கள் எத்தனை நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற தகவலை பைடன் தெரிவிக்கவில்லை.

ஆனால், மத்திய நோய் தடுப்பு கட்டுப்பாட்டு அமைப்பு 10 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது. எத்தனை நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முழுமையான விவரம் தற்போதுவரை வெளியாகவில்லை. இந்த சுய தனிமைப்படுத்தல் நடைமுறை ஜனவரி 26-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com