ஜமைக்கா நாட்டில் அம்பேத்கர் தெருவை திறந்து வைத்தார் இந்திய ஜனாதிபதி

ஜமைக்கா நாட்டுக்கு சென்றுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அங்கு அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்ட தெருவை திறந்து வைத்தார்.
ஜமைக்கா நாட்டில் அம்பேத்கர் தெருவை திறந்து வைத்தார் இந்திய ஜனாதிபதி
Published on

4 நாள் பயணம்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கரீபியன் நாடான ஜமைக்காவுக்கு 4 நாள் பயணமாக கடந்த 15-ந் தேதி சென்றார். தலைநகர் கிங்ஸ்டன் விமான நிலையத்தில் அவரை அந்நாட்டு கவர்னர் ஜெனரல் சர் பேட்ரிக் ஆலன், பிரதமர் ஆன்ட்ரூ ஹோல்னஸ் ஆகியோர் வரவேற்றனர்.

ஜமைக்காவுக்கு இந்திய ஜனாதிபதி ஒருவர் செல்வது இதுவே முதல் முறை ஆகும். இந்தியா-ஜமைக்கா இடையே தூதரக உறவு தொடங்கி 60 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, அவரது பயணம் அமைந்துள்ளது.

அம்பேத்கர் தெரு

இந்தநிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கிங்ஸ்டனில் சட்ட மேதை அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்ட தெருவை திறந்து வைத்தார். டவர் தெரு என்ற தெருவின் ஒரு பகுதிக்கு அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தியர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, அம்பேத்கர் பெயர் சூட்ட கிங்ஸ்டன் மற்றும் செயின்ட் ஆன்ட்ரூ மாநகராட்சி சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. அதையடுத்து, டாக்டர் அம்பேத்கர் அவென்யூ என்ற பெயரிலான தெருவை ஜனாதிபதி திறந்து வைத்துள்ளார்.

பேச்சுவார்த்தை

ஜமைக்கா நாட்டின் கவர்னர் ஜெனரல் சர் பேட்ரிக் ஆலனுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தினார். தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், மருந்துகள் துறை, விளையாட்டு, கல்வி, சுற்றுலா, ஓட்டல் தொழில் ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

பிரதமர் ஆன்ட்ரூ ஹோல்னசையும் ஜனாதிபதி சந்தித்தார். வர்த்தகம், முதலீடு, சேவை, சுகாதாரம், ரெயில்வே, போக்குவரத்து சேவைகள், விளையாட்டு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது பற்றி இருவரும் ஆலோசனை நடத்தினர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை ஜமைக்கா எதிர்க்கட்சி தலைவர் மார்க் கோல்டிங் சந்தித்து பேசினார்.

ஒப்பந்தம்

இந்த பயணத்தில் ஜனாதிபதி முன்னிலையில் இருநாடுகள் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. சுஷ்மா சுவராஜ் வெளியுறவு சேவை நிலையத்துக்கும், ஜமைக்கா வெளியுறவு வர்த்தக அமைப்புக்கும் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, ஜமைக்கா வெளியுறவு பணி அதிகாரிகள், சுஷ்மா சுவராஜ் வெளியுறவு சேவை நிலையத்தில் பயிற்சி பெறுவார்கள்.

ஜமைக்கா நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அடங்கிய கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுகிறார். இந்திய-ஜமைக்கா நட்புறவு தோட்டத்தை திறந்து வைக்கிறார். அங்கு சந்தன மரக்கன்று நட்டு வைக்கிறார்.

வளரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பரிசளிக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com