

புட்ச்ரெஸ்ட்,
ஜனாதிபதி திரவுபதி முர்மு ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் மால்டோவா, வடக்கு மாசிடோனியா, ருமேனியா ஆகிய 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அதன்படி பயணத்தின் முதல் நாடாக கடந்த 20ம் தேதி ஜனாதிபதி முர்மு மால்டோவா சென்றார். அங்கு அந்நாட்டு ஜனாதிபதி மயா சந்து, துணை பிரதமர் மைஹை பாப்சொய் உள்பட பலரை ஜனாதிபதி முர்மு சந்தித்தார்.
மால்டோவா பயணத்தை நிறைவு செய்த ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணத்தின் 2வது நாடாக கடந்த 21ம் தேதி வடக்கு மாசிடோனியா நாட்டிற்கு சென்றார். அங்கு வடக்கு மாசிடோனியா ஜனாதிபதி சில்ஜனொவ்ஸ்கா டவொகாவை ஜனாதிபதி முர்மு சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், பயணத்தின் 3வது நாடாக ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று ருமேனியா சென்றார். அவர் அந்நாட்டு ஜனாதிபதி நிகோசர் டென்னை சந்தித்தார். இதையடுத்து, இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ருமேனிய தொழிலதிபர்களை ஜனாதிபதி சந்தித்தார்.
இந்திய - ருமேனிய தொழிலதிபர்கள் கூட்டத்தில் பங்கேற்ற ஜனாதிபதி முர்மு இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு ருமேனிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.
அளவற்ற வாய்ப்புகள் உள்ள இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் பங்கேற்க வருமாறு ருமேனிய நிறுவனங்களுக்கு ஜனாதிபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார்.