

புட்ச்ரெஸ்ட்,
ஜனாதிபதி திரவுபதி முர்மு அரசு முறை பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அதன்படி, கடந்த 20ம் தேதி மால்டோவா சென்ற ஜனாதிபதி முர்மு அந்நாட்டு ஜனாதிபதி மயா சந்துவை சந்தித்தார். இதையடுத்து, 21ம் தேதி வடக்கு மாசிடோனியா சென்ற ஜனாதிபதி முர்மு அந்நாட்டு ஜனாதிபதி சில்ஜனொவ்ஸ்கா டவொகாவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து வடக்கு மாசிடோனியாவில் இருந்து கடந்த 23ம் தேதி ஜனாதிபதி முர்மு ருமேனியா சென்றார். அவர் ருமேனிய ஜனாதிபதி நிகோசர் டென்னை சந்தித்தார். இதையடுத்து கடந்த 2 நாட்கள் ருமேனியாவில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி முர்மு பங்கேற்றார்.
இந்நிலையில், மால்டோவா, வடக்கு மாசிடோனியா, ருமேனியா ஆகிய 3 ஐரோப்பிய நாடுகள் பயணத்தை நிறைவு செய்த ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று இந்தியா புறப்பட்டார். அவர் நாளை காலை தலைநகர் டெல்லி வந்தடைகிறார்.