இங்கிலாந்தில் மீண்டும் முழு ஊரடங்கு - பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

இங்கிலாந்தில் நவம்பர் 5 முதல் டிசம்பர் 2 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் மீண்டும் முழு ஊரடங்கு - பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு
Published on

லண்டன்,

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரசின் 2-வது அலை பரவ தொடங்கி உள்ளது. குறிப்பாக பிரான்சில் கொரோனா வைரஸ் உச்சத்தில் உள்ளது. பிரான்ஸ் நாட்டில் வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13 லட்சத்து 31 ஆயிரத்து 984 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் அந்நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 565 ஆக அதிகரித்துள்ளது.

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனாவில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 274 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்தப் பாதிப்பு 9.89 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், அங்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து அந்நாட்டு அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியானது.

இங்கிலாந்து அரசின் கொரோனா தடுப்பு ஆலோசனைக் குழுவின் உறுப்பினரும், தொற்றுநோய் தடுப்பு வல்லுநருமான ஜான் எட்முன்ட்ஸ் கூறுகையில், பிரதமர் போரிஸ் ஜான்ஸன் அறிவித்த கட்டுப்பாடுகள் நிச்சயம் நோய்த் தொற்றைக் குறைக்கவோ, கட்டுப்படுத்தவோ உதவாது. ஆதலால், அத்தியாவசியப் பணிகளைத் தவிர்த்து மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம் என்று கூறினார்.

இதனை தொடர்ந்து இங்கிலாந்தில் வரும் 5 ஆம் தேதி(வியாழக்கிழமை) முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை ஒரு மாத காலம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். இந்த புதிய ஊரடங்கில் அத்தியாவசியமில்லாத பணிகள், கடைகள், அனைத்தும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கை போல் இல்லாமல் இந்த முறை பள்ளிகள், கல்லூரிகள் திறந்திருக்கும் என்றும் மாணவர்கள் விரும்பினால் வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து போரிஸ் ஜான்சன் பேசுகையில், நாம் எதிர்பார்த்தை விட ஐரோப்பிய நாடுகளில் தற்போது கொரோனா வைரசின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. எனவே நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் ஏப்ரல் மாதம் ஏற்பட்டதை விட மிக மோசமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது போன்ற கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகள் மூலம், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com